Published : 13 Dec 2023 06:37 AM
Last Updated : 13 Dec 2023 06:37 AM
கிளாம்பாக்கம்: சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமார் 88 ஏக்கர் நிலத்தில் ரூ.397.15 கோடி செலவில் இந்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரம் பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள், 3500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளையும் இங்கிருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காவல் நிலையம், பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தற்போது, முதல்கட்டமாக வண்டலூர் பூங்காவிலிருந்து நேற்று 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையிலிருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளே சென்று மீண்டும் பேருந்து நிலையத்தின் பின் வாயில் வழியாக வெளியே வந்து ஊரப்பாக்கம் அருகே ஜிஎஸ்டி சாலையை அடைந்தன. அதேபோல் தென், வட மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் வண்டலூர் பூங்கா அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று பேருந்து நிலையத்தை அடையும் வகையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. வரும் வெள்ளி, சனிக்கிழமை மாலை நேரத்தில் மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு திறக்கப்படலாம்: வரும் பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT