Published : 12 Dec 2023 12:09 PM
Last Updated : 12 Dec 2023 12:09 PM

மிக்ஜாம் புயல் பாதிப்பு | தமிழகம் வந்த மத்திய குழு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசு நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் வந்துள்ள மத்திய குழுவினர், சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் துறை செயலாளர்கள் உடன் மத்திய குழு செவ்வாய்க்கிழமை மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த வீடியோப் பதிவு திரையிடப்படுகிறது. ஏரிகள், சாலைகள், உட்கட்டமைப்புகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், குடியிருப்புப் பகுதிகள், மின்கம்பங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் வகையில் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த மத்தியக் குழுவின் ஆய்வுக்குப் பின்னர்தான், சேதங்களின் அடிப்படையில் மத்திய அரசு நிதியை விடுவிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் மத்தியக் குழுவினரிடம் சமர்ப்பித்து அதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்த மத்திய குழு இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வுக்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மட்டும் நாளை என இரண்டு நாட்கள் கள ஆய்வு செய்த பிறகு, மீண்டும் தலைமைச் செயலகத்தில், மீண்டும் தலைமைச் செயலாளரை சந்தித்து பின்னர், மழை வெள்ள பாதிப்புகள், மற்றும் மீட்பு நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்த ஆய்வுக்குப் பின்னர், ஒரு வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்துக்கு புயல் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு திங்கள்கிழமை மாலை சென்னை வந்தது. கடந்த டிச.4-ம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கியதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத வெள்ளத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தற்போது ஒருசில இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், புயல் பாதிப்புக்கான இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடியை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

இந்நிலையில், புயல் பாதிப்பை கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிட்டு, முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய குழுவை அனுப்பும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இ்ந்நிலையில், தமிழகத்துக்கு மத்திய குழுவை அனுப்புவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் இதர துறைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மிக்ஜாம் புயல் பாதிப்பை கண்டறிய மத்திய குழுவை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் சேதம் குறித்த இறுதி அறிக்கை அளித்ததும், மத்திய குழு பாதிப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை தயாரிக்கும். புயல் மிகக் கடுமையானதாக கருதப்பட வேண்டியதா என்பதை மத்திய குழு முடிவெடுத்து பரிந்துரைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x