

ஓசூர்: ஓசூர் அரசு மருத்துவமனையில் அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்படுவதால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் சூழல் ஏற்படுகிறது. இதனைப் போக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் 325 படுக்கைகள் உள்ளன. 56 செவிலியர்கள், 26 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி, தளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஓசூர் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களும் என தினமும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறைவால் நோயாளிகள் உரிய நேரத்திற்கு சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காய்சல், சளி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிகிச்சை பெற ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்போது வழக்கம் போல் நோயாளிகளின் பெயர், வயது, முகவரி மற்றும் சிகிச்சை குறித்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் நேயாளிகளுக்கு வழங்கப்படும் ஓபி சீட்டை வைத்து மருத்துவர்களிடம் காண்பித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் ஆன்லைன் சர்வர் பிரச்சினையால் நோயாளிகள் வருகை பதிவு செய்வது மற்றும் மருந்துகள் வழங்குவது தாமதம் ஆவதால் நோயாளிகள் நீண்ட நேரம் ஓபி சீட்டு மற்றும் மருந்துகள் வாங்க முடியாமல் காத்திருக்கும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் போது, அடிக்கடி ஆன்லைன் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.
ஓபி சீட்டு மற்றும் மருந்துகளை ஆன்லைனில் பதிவு செய்ய முடியாததால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் ஊசி செலுத்தும் இடம் மற்றும் மருந்து வழங்கும் இடங்களில் ஒரே நேரத்தில் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நிற்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே ஆன்லைன் சர்வர் பிரச்சினை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும், என்றனர்.
இது குறித்து ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஞானமீனாட்சி கூறியதாவது: ஓசூர் அரசு மருத்துவமனையில் அடிக்கடி ஆன்லைன் சர்வர் பிரச்சினை ஏற்படுவது உண்மை தான். இதேபோல் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுகிறது. அதனை சிறிது நேரத்திலேயே சரி செய்யப் படுகிறது. அப்போது சீட்டு எழுதி நோயாளிகளுக்கு வழங்குகிறோம். இதனால் சிறிது நேரம் கூட்டமாக இருக்கும். ஊசி செலுத்திக் கொள்ளும் பிரிவில் நெரிசலைக் குறைக்க 2 கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன, எனக் கூறினார்.