

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு வேளாளர் திருமண மண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கல சிலை ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பங்கேற்று தீரன் சின்னமலை சிலையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியின் போது நாடாளுமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு தொகுதி நிதி வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றிய போது இதற்கு எதிராக காஷ்மீர் எம்.பி பீம் சிங் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிடம் வந்த போது 4 நீதிபதிகள் தொகுதி நிதி கொடுக்கக் கூடாது என முடிவெடுத்தனர்.
அப்போது, கிராமப் புறத்தில் இருந்து சென்றதால் அதன் முக்கியத்துவத்தை அவர்களிடம் விளக்கி நிதி வழங்கிட செய்தேன். அதே போல் வாக்களிக்கும் இயந்திரத்தில் நோட்டா அமைக்கவும் தீர்ப்பு வழங்கினேன். கிழக்கிந்தியர் ஆட்சியின் போது அவர்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த விடுதலைப் போராட்ட வீரரும், போராளியுமான தீரன் சின்ன மலையின் வீரம் போற்றத்தக்கது. அவரின் சிலை திறப்பது சிறப்பானது.
தருமபுரி , கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கொங்கு மண்டல மக்கள் மற்றவர்கள் மீது வெறுப்பு, பகையுடன் நடந்து கொள்வதில்லை. அதனால் தான் கல்வி, தொழில், மருத்துவம் என வேலை வாய்ப்பு தேடி வட மாநிலத்தவர்களும் வருகை தரும் பகுதியாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கர்நாடக மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை ஆணையர் ராமச்சந்திரன், ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் செ.முத்துசாமி, ஈரோடு, கொங்கு கல்வி நிலையங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பெருந்துறை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சென்னியப்பன், கொமதேக பொதுச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., சின்ராஜ் எம்பி, கொங்கு வேளாள கவுண்டர் மாநில பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜ், கொங்கு இளைஞர் பேரவைநிறுவனத் தலைவர் உ.தனியரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட கொங்கு வேளாளர் சங்கத் தலைவர் வே.சந்திரசேகரன், செயலாளர் சேகர், பொருளாளர் தங்கராசு மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.