Published : 10 Dec 2023 04:43 AM
Last Updated : 10 Dec 2023 04:43 AM

வக்ஃப் வாரியத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகள் மோசடி தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி, விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட வக்ஃப் வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வக்ஃப் வாரிய பாதுகாப்புக் குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலர் மங்கத் ராம் சர்மா, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் மற்றும்முதன்மை செயல் அதிகாரி ஆகியோருக்கு எதிராக தொடர்ந்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூறியிருந்ததாவது:

சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ள எங்களது வக்ஃப் வாரிய பாதுகாப்பு மையம் சார்பில் வக்ஃப்வாரிய சொத்துகளை பாதுகாக்க விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய ஏழை, எளிய மக்களுக்கு உதவும் நோக்கிலேயே வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் கொடையாக பெறப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப்வாரிய சொத்துகளை கண்காணித்து நிர்வகிக்கும் பொறுப்புவக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வக்ஃப் வாரியத்தில் பணிபுரிந்த முன்னாள் முதன்மை செயல் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பலர் தங்களுக்குள் கூட்டணி அமைத்து சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரிய சொத்துகளுக்கு தடையில்லா சான்று வழங்கி அதன்மூலம் மூன்றாவது நபர்களுக்கு அவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்தமோசடி குறித்து விரிவாக விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட வக்ஃப் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலருக்கும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் மற்றும் வக்ஃப் வாரிய முதன்மை செயல் அதிகாரிக்கும் கடந்த 2021 ஆக.16 அன்று உத்தரவிட்டது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் விசாரிக்க தமிழகஅரசு உத்தரவிட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள வக்ஃப் வாரிய சொத்துகளை முறைகேடாக தனி நபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக இருந்த வக்ஃப் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசின் முதன்மைச் செயலர் மற்றும் வக்ஃப் வாரிய அதிகாரிகள் மீதுஅவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார் ஆஜராகி, தவறு செய்துள்ள வக்ஃப் வாரிய அதிகாரிகள் மீது தமிழக அரசு கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இந்த அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்து இதுதொடர்பாக தமிழகஅரசும், வக்ஃப் வாரிய அதிகாரிகளும் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x