தரைதட்டிய தற்காலிக தரைப்பாலம்: அச்சத்துடன் ஆற்றை கடக்கும் மாணவர்கள், பொதுமக்கள் @ காஞ்சிபுரம்

செல்லியம்மன் நகர் பகுதியில் ஆபத்தான முறையில் வேகவதி ஆற்றை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.
செல்லியம்மன் நகர் பகுதியில் ஆபத்தான முறையில் வேகவதி ஆற்றை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.
Updated on
2 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த முருகன் குடியிருப்பு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் ஆற்றை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், செல்லியம்மன் நகர் பகுதியில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டில் தாட்டிதோப்பு எனப்படும் முருகன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு, அண்ணாநகர், செல்லியம்மன் நகர், பல்லவர் நகர் உட்பட பல்வேறு நகர் பிரிவுகள் அமைந்துள்ளன.

இங்கு, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, வசிக்கும் பொதுமக்களில் பலர் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நெசவுத்தொழிலாளர் தாங்கள் உற்பத்தி செய்யும் பட்டுச் சேலைகளை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக நகரப்பகுதிக்கு வந்து செல்ல வேகவதி ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, வேகவதி ஆற்றின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 2 இடங்களில் சிமென்ட் குழாய்கள் மூலம் தற்காலிக தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், கனமழை காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்த தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சுமார் 3 கி.மீ., தொலைவு சுற்றிக்கொண்டு முத்தியால் பேட்டையை அடைந்து, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பிரதானசாலை வழியாக நகருக்குள் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், முருகன் குடியிருப்புபகுதியில் உள்ள தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர். மேலும், செல்லியம்மன் நகர் பகுதியில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிக்ஜாம் புயலுக்கு பிறகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம்.
மிக்ஜாம் புயலுக்கு பிறகு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம்.

புயலால் கனமழை: இந்நிலையில், மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தது. இதையடுத்து, தற்காலிக தரைப்பாலத்தில் மண்அரிப்பு ஏற்பட்டதால் கூடுதலாக 1,500 மணல் மூட்டைகளை தரைப்பாலத்தில் போட்டு மண் அரிப்பு தடுக்கப்பட்டது. எனினும், தற்காலிகமாக தீர்வு காணாமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் ஜெயவேல் கூறியதாவது: ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனமும் உடனடியாக எங்கள் பகுதிக்கு வர முடியாத நிலை உள்ளது. அதனால், ஆற்றின் குறுக்கே நிரந்தர தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றார். இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த லோகநாதன் கூறியது: முருகன் குடியிருப்பு பகுதியில் உள்ள தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்ததற்கு பொதுப்பணித்துறை மேற்கொண்ட சில மாற்றங்களே காரணம். தரைப்பாலத்தில் உள்ள சிமென்ட் குழாய்களால் தண்ணீர் மெதுவாக செல்வதாக கூறி தரைப்பாலத்தில் மாற்றம் செய்தனர்.

இதனால், நகரப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் ஆற்றை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர். மேலும், நெசவாளர்களும் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுச்சேலைகளை கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியதும் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி பாதை ஏற்படுத்தினர். ஆனால், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பாலத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது.மேலும், ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தால் மீண்டும் போக்குவரத்து தடைப்படும். அதனால், இங்கு நிரந்தர தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: முருகன் குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, செல்லியம்மன் நகர் பகுதி அருகேவேகவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 60 மீட்டர் நீளம் மற்றும் 6 மீட்டர் அகலத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்குவதற்காக, அப்பகுதியில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவாக தரைப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in