

ஓசூர்: தேன்கனிக்கோட்டை நகர் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதிவுற்று வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சுற்றிலும் வனம் சூழ்ந்துள்ளது. இங்கு பல வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேன்கனிக்கோட்டையையொட்டி உள்ள கிராமப்பகுதிகளுக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்திச் செல்கின்றன. குரங்குகளும் வனத்தைவிட்டு வெளியேறி கிராமப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தன.
தற்போது குரங்குகள் கூட்டமாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து கடைகள் மற்றும் வீடுகளில் உள்ள உணவுப் பொருட்கள், பழங்களை தூக்கிச் செல்கின்றன. வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்துகின்றன. மின்வயர்கள், செல்போன் கேபிள் வயர்கள் மீது ஏறி, துண்டித்து விடுகின்றன. குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து குரங்குகள் கூட்டமாக வந்து விளை நிலங்களில் புகுந்து காய்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி வந்தன. கடந்த சில வாரங்களாக தேன்கனிக்கோட்டை குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து மின்வயர்கள் மற்றும் கேபிள் வயர்கள் மீது தொங்கிச் செல்கின்றன. வயர்கள் அறுந்து சேதமாவது மட்டும் அல்லாமல்,இதன் மூலம் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் வீடு மற்றும் கடைகளுக்குள் புகுந்து பிஸ்கட், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தூக்கிச் செல்கின்றன. துரத்தும்போது கடிக்க வருகின்றன. எனவே நகர்ப் பகுதிக்குள் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வேண்டும், என்றனர்.