Published : 03 Dec 2023 04:06 AM
Last Updated : 03 Dec 2023 04:06 AM

மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு சலுகை: 17-ம் தேதியும் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கும் வசதி மேலும் ஒரு நாள் (டிச.17) நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, இன்று(டிச.3 - ஞாயிறு) ஒருநாள் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி, மெட்ரோ ரயிலில் (ஒரு வழிப்பயணத்துக்கு) ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

புயல் சின்னம்: இந்நிலையில், புயல் சின்னம் காரணமாக, ஞாயிற்றுக் கிழமை (டிச.3) பயணிப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. எனவே, இந்த வசதி மேலும் ஒருநாள் ( டிச.17 ) நீட்டிக் கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வட கிழக்குப் பருவமழை காரணமாக, புயல் உருவாகி கனமழை பெய்ய உள்ளது. இதனால், ஞாயிற்றுக் கிழமை ( டிச.3 ) அதிக அளவில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும், தவிர்க்க முடியாத காரணத்தால்,

மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். அதிக பயணிகள் இந்த பிரத்யேக கட்டணத்தில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ரூ.5 பயணக் கட்டணத்தில் வரும் டிச. 17- ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) அன்றும் பயணிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஞாயிறு சேவையில் மாற்றம்: மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த மாற்றம் இன்று (டிச.3) முதல் அமலுக்கு வருகிறது. மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பழைய அட்டவணையின்படி, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல்இரவு 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை களில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால், இன்று (டிச.3) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x