

டிச.4-ல் சென்னை - ஆந்திரா இடையே புயல் கடக்க வாய்ப்பு: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் 3-ல் புயலாக உருவாகி டிசம்பர் 4-ஆம் தேதி மாலை சென்னை - ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, "அடுத்து வரும் 4 தினங்களைப் பொறுத்தவரை, வடதமிழக மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். சனிக்கிழமை டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி திருவள்ளூர், சென்னை தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்" என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
புயல் சின்னம்: தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவு: வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர், "மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும்.பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.கனமழையின் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல் துறை இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்திட வேண்டும்"என்றார்
அயோத்திதாச பண்டிதரின் மணிமண்டபம் திறப்பு: அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழன், திராவிடன் சொற்களை அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய சிந்தனைகள், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும்” என்று பேசினார்.
“மசோதாக்களை இழுத்தடிக்க ஆளுநர் ரவி முயற்சி” - அமைச்சர்: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, ஆளுநர் ரவி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாஉள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நவம்பர் 18 கூட்டப்பட்டு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, பின்னர், ஆளுநருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீட்சிதர்கள் குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு: சிதம்பரம் - நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவினர் குழந்தைகள் திருமணங்கள் நடத்துவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் எதிர்மனுதாரராக பொது தீட்சிதர்களை சேர்க்கவும் மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பேசுபொருளான தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னம்: தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commision) சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படமும், பாரதம் என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
“COP33 உச்சி மாநாட்டை நடத்த இந்தியா தயார்” : ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா முன்வந்துள்ளது. துபாயில் நடைபெற்று வரும் COP28 உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ''காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதன் காரணமாகவே, இந்த மேடையில் நான் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். COP33 உச்சி மாநாட்டை 2028-ம் ஆண்டு நடத்த இந்தியா தயாராக இருக்கிறது" என்றார்.
“எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது”: எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டதன் 59-ம் ஆண்டு விழா ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைப் பாதுகாப்புப் படையினரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சியும், செழிப்பும் காணாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்:கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள 10-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலையில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மிரட்டலுக்கு ஆளான பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி ஒன்றுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், "நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டுக்கு எதிரே இருந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பள்ளியை ஆய்வு செய்ய நான் இங்கு வந்தேன். இப்போது வரை இதுவெறும் மிரட்டலாகவே தெரிகிறது. என்றாலும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
முடிவுக்கு வந்தது ஒரு வார கால போர் நிறுத்தம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான ஒரு வார கால போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து சிறிது நேரத்திலேயே போர் தொடங்கிய நிலையில், காசாவில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான இந்த போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை போர் மீண்டும் தொடங்கியது.