Published : 30 Nov 2023 04:04 AM
Last Updated : 30 Nov 2023 04:04 AM
ஆவடி: சென்னை - அம்பத்தூர் அருகே பாடி, யாதவர் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் குமார் (57). திமுக பிரமுகரான இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். சம்பத்குமார், நாள்தோறும் கொரட்டூர், ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோயிலைச் சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில், நேற்று நடை பயிற்சிக்கு சென்ற போது மழை பெய்ததால் சம்பத் குமார், அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் முன்பு ஒதுங்கி, அங்குள்ள இரும்பு தகடுகளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிலிருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சம்பத்குமார், அக்கம் பக்கத்தினரால் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், ஏற்கெனவே சம்பத் குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, தகவல் அறிந்த கொரட்டூர் போலீஸார், சம்பத் குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடைபெறுகிறது.
மின்துறை விளக்கம்: இது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் மின் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்தி பெறப்பட்ட உடன், மின் தடை நீக்க பணியாளர்கள் சம்பவ இடம் விரைந்து, ஜம்புகேஸ்வரர் நகர் மின்மாற்றியில் மின் துண்டிப்பு செய்தனர்.
சம்பத்குமார் மழைக்காக ஒதுங்கி நின்ற தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு மீட்டர் உள்ள சுவர் முழுவதும் மழையின் காரணமாக ஈரமாக இருந்ததால் மின் கசிவு ஏற்பட்டு அங்குவைக்கப்பட்டிருந்த இரும்புதகடுகளில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அந்ததகடுகளின் மீது நின்றதால் தான் சம்பத்குமார் மின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வில், மின் விபத்து தொழிற்சாலையிலிருந்து கசிந்த மின்சாரத்தால் ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆகவே, இந்த விபத்துக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT