

மதுரை: மக்களின் வாழ்விடங்கள், இயற்கை வளங்கள் மற்றும் சூற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேலூர் சேக்கிபட்டி கிரானைட் குவாரிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. பல விதிமீறல்களை மறைத்து ஏலம் விடுவதை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் இன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா.சா.முகிலன், பறம்புமலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.கர்ணன், சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ந.சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: "மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிப்பட்டியில் பல வண்ண கிரானைட் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், சிறு கனிம சலுகை விதிகள்-1959 மீறப்பட்டுள்ளன.
குவாரியின் வெளி முனைப்பகுதியிலிருந்து 300 மீ சுற்றளவில் வீடுகள், நிரந்தர கட்டுமானங்கள், உயர்மின் கோபுரங்கள் உள்ளன. 50 மீ தூரத்தில் ஓடை, நீர்நிலை, வாய்க்கால் உள்ளன. 300 மீ சுற்றளவில் பனிமலை முருகன் கோயில், செண்பகவிநாயகர் கோயில்கள் உள்ளன. 500 மீ சுற்றவிளவில் கண்மாய், குளம், ஊருணி போன்ற நீர்நிலைகள் உள்ளன.
இந்தப் பகுதியில், பழந்தமிழர்களின் வாழ்வியல் இடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், சமணப்படுகைகள், தொல்லியல் இடங்கள் உள்ளன. மேலும் அரியவகை தேவாங்கு உயிரினங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. இவற்றை எல்லாம் மறைத்து அரசு அதிகாரிகள் சான்று வழங்கியுள்ளனர். பல்வேறு சட்ட அடிப்படையிலும், சிறு கனிம விதிகளின்படியும் சேக்கிபட்டியில் கிரானைட் குவாரி அமைக்க முடியாது. கிரானைட் குவாரி அமைக்க அரசு அனுமதித்தால் அது இயற்கை, சூழலியல், பல்லுயிர் சூழலுக்கு விரோதமாக அமையும். எனவே கிரானைட் குவாரிக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளிக்கக்கூடாது" என்று அவர்கள் தெரிவித்தனர்.