

‘விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை’ - மருத்துவமனை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று சென்னை - மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
“திராவிட மாடல் அல்ல... தந்திர மாடல் ஆட்சி” - இபிஎஸ்: “அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று சொல்லிவிட்டு அதற்கான பேருந்துகளை தந்திரமாக அரசு குறைத்துள்ளது. அதேபோல் பெண் பயணிகளிடம் சாதி, கைபேசி எண் விவரம் கேட்கப்படுகிறது. இது சிக்கலை ஏற்படுத்தும். இது திராவிட மாடல் ஆட்சி அல்ல தந்திர மாடல் ஆட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது.
வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா: ‘பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்கு திரைத்துறையில் இருந்து பரவலாக எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் ஞானவேல்ராஜா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்திவீரன் பட சர்ச்சை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதைப் பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரைக் குறிப்பிடுவேன். ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவர் சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்குப் பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவரைப் புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் பரவும் நிமோனியா - மத்திய அரசு அலர்ட்: சீனாவில் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியான நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உத்தராகண்ட், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. தத்தம் மாநிலங்களில் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளன.
இதனிடையே, புதிய வைரஸ் காய்ச்சல் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
வெறுப்பு பேச்சு விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: வெறுப்பு பேச்சுகளால் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை செயல்படுத்த நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்களா, இல்லையா என்பது குறித்து தமிழகம், கேரளா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளையில், சனாதன சர்ச்சை விவகாரத்தில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம நிராகரித்துவிட்டது.
“சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதை தடுக்க முடியாது” - அமித் ஷா:“குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டின் சட்டம். இந்தச் சட்டத்தை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது” - மோடி பாராட்டு: உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் மகிழ்ச்சியுடன் வெளி வந்துள்ளீர்கள். அதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கேதார்நாத் பாபா, பத்ரிநாத் ஜியின் கருணையால் நீங்கள் அனைவரும் நலமாக இருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் தைரியமாக இருந்து, மற்றவர்களையும் தைரியப்படுத்தியுள்ளீர்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் நீங்கள் மிகவும் பொறுமை காத்துள்ளீர்கள். உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது என உத்தராகண்டில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களிடமும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இதனிடையே உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
டிச.2, 3-ல் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு:“தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது . இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக, தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3-ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் புதன்கிழமை விட்டுவிட்டு பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ராகுல் திராவிட் பதவிக் காலம் நீட்டிப்பு: நடந்து முடிந்த உலகக் கோப்பையுடன் நிறைவடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிசிசிஐ-யின் கோரிக்கையை ராகுல் திராவிட் ஏற்றுக் கொண்டார். ஆனால், நீட்டிப்பு காலம் பற்றிக் கூறப்படவில்லை. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை திராவிட்டின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.