

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பள்ளி செல்லும் சிறுவர்களை சுமந்து கொண்டு கயிற்றை பிடித்து கால்வாயை கடந்த புதூர்வலசை கிராம பெரியவர்கள். பரமக்குடி அருகே புதூர்வலசை கிராம மக்கள் வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் ஆபத்தான முறையில் கயிறை கட்டி கால்வாயை கடந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 25-ம் தேதி பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது.
அன்றைய தினம் மாவட்ட பாசனத்துக்காக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் வைகையாறு மற்றும் வைகை வலது, இடது பிரதானக் கால்வாய்களில் திறந்து விடப்பட்டது. இதனால் பெரும்பாலான வைகை பாசன கண்மாய்களின் வரத்து கால்வாய்களில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றி யத்துக்கு உட்பட்ட புதூர் வலசை கிராமத்தில் ஊருக்கு நடுவே செல்லும் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் ஒருபுறம் உள்ள கிராம மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியரும் விடுமுறை எடுத்து வீட்டிலேயே உள்ளனர். அவசர தேவைக்காக கிராம மக்கள் கயிறு கட்டி ஆபத்தான முறையில் கால்வாயை கடந்து செல்கின்றனர்.
ஒருபுறம் ராமநாதபுரம் மாவட்டம் மற்றொருபுறம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்துள்ளதால் கால்வாயில் பாலம் கட்டுவதில் சிக்கல் உள்ளது. இதனால் மழைக் காலத்தில் இதே நிலை நீடிப்பதால் கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இரண்டு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து கால்வாயில் பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.