Published : 28 Nov 2023 12:47 PM
Last Updated : 28 Nov 2023 12:47 PM

“மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது” - செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பரிசீலனைக்காக செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை அவர் தரப்பில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பேலா எம். திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு, "செந்தில் பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தபோதும், உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. (serious or life-threatening). நானும் கூகுள் செய்து பார்த்தேன். இதை குணப்படுத்த முடியும் என்றுதான் கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும்” என்று தெரிவித்தது.

மேலும் செந்தில் பாலாஜி தரப்பில், ”மனுதாரருக்கு பைபாஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டுள்ளன. உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், brain stroke- க்கை ஏற்படுத்தும்” என்ற வாதத்தை முன்வைத்து வாதிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் சாதாரண ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னணி என்ன?: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது சிறையிலிருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு எதிராக, குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் ஜூன் 16 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 20 ஆம் தேதிகளில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து முழுமையாகக் குணமடையாத சூழலில், மீண்டும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, `மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது. செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது’ எனக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x