

மதுரை: மேலூரில் பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு, ஒருபோக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை மேலூர் பகுதிக்கு ஒரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, வலியுறுத்தி ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி,மேலூரில் ஒரு போக விவசாயிகள் திரண்டனர். மேலூர் மூவேந்தர் திருமண மண்டபம் முதல் நீர்வளத்துறை அலுவலகம் வரையிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர். பின்னர், அவர்கள் ஒரு போக விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு கடையடைப்பு செய்து வணிகர்களும் ஆதரவளித்தனர். மேலூர் பகுதி வழக்கறிஞர் சங்கத்தினரும் பணிக்குச் செல்லாமல் போராட்டத் தில் பங்கேற்றனர். அதிமுக, அமமுக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு கொடுத்தனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் திடீரென தண்ணீர் கேட்டு மதுரை- திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை பயன்படுத்தி தடுத்தனர். அப்போது, சங்க பிரதிநிதிகளுடன் எஸ்பி சிவபிரசாத் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
ஆனாலும், பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நீர்வளத் துறை செயற்பொறியாளர் சிவபிரபாகரனுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து 40 நாள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, அதிகாரிகள் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறியபடி தண்ணீர் திறக்கவிட்டால் அடுத்த கட்டபோராட்டத்தை முன்னெடுப்போம் என விவசாயிகள் சங்கம் தரப்பில் தெரிவித்தனர். இதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டத்தையொட்டி, மேலூர் பகுதியில் எஸ்பிக்கள் சிவபிரசாத் (மதுரை), சீனிவாச பெருமாள்( விருதுநகர்),அரவிந்த்( சிவகங்கை) ஆகியோர் தலைமையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.