ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2 கோடியில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் திறப்பு

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.1.71 கோடி செலவில் பல்வேறு புதிய மருத்துவ கட்டமைப்புகள் நேற்று திறக்கப்பட்டன.

இதை திறந்து வைத்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3,172 படுக்கை வசதிகள் இருக்கின்றன. உள் நோயாளிகளுக்கு உயர் தர உணவு வழங்கும் விதமாக ரூ.81லட்சம் செலவில் நவீன சமையலறை திறக்கப்பட்டுள்ளது. இதே போல பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் 6 ஓய்வு அறைகள் ரூ.18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவ மனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய படுக்கை விரிப்புகள் இருக்க வேண்டுமென்ற நோக்கில் ரூ.65 லட்சம் செலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்கள் என வாரத்தில் நாளொன்றுக்கு 6 வண்ணங்களில் புதிய படுக்கை விரிப்புகள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இதுபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு புதிய வண்ண படுக்கை விரிப்புகள் படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். உயர் சிறப்புமருத்துவ இடங்களுக்கு 50 சதவீதம் இடங்களை அனுமதிக்க மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை கொடுத்திருந்தோம். அதை ஏற்று மத்திய அரசு 407 இடங்களுக்கு 204 இடங்களை தமிழக அரசு நிரப்புவதற்கான அனுமதிக்கப்பட்டது.

மேலும், உயர் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்புக்கான இடங்கள் காலியாக இருந்தன. மேலும், எம்டி, எம்எஸ் முதுகலை படிப்புகளுக்கு 74 இடங்களும், எம்.டி.எஸ் பல் மருத்துவ படிப்புகளுக்கு 48 இடங்களும் டிஎன்பி படிப்புக்கு 11 இடங்களும் காலியாக இருந்தன. எனவே, இந்த மருத்துவ படிப்பு இடங்களை நிரப்பிக் கொள்வதற்கு ஒரு கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in