

சென்னை: சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவையொட்டி சங்கர நேத்ராலயா சார்பில் சென்னையில் நேற்று இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் மருத்துவத் துறை பிரபலங்கள், அரசு அதிகாரிகள், சக ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற நடிகர் ரஜினி காந்த் பேசியதாவது: ”கண் தானம் குறித்து விளம்பர படம் நடித்துக் கொடுக்குமாறு அவர் கேட்ட போது நான் மறுத்து விட்டேன். பின்னர் அவரது எளிமை, இனிமை, தூய்மையால் கவர்ந்து, அவர் கேட்ட படி படத்தை நடித்துக் கொடுத்தேன்.
அவரது கண் மருத்துவ சேவை ஏழை எளிய-வர்களுக்கும் இலவசமாக வழங்கி வருவது மட்டுமல்ல, தனது மரணத் தன்று கூட சங்கர நேத்ராலயா-வின் சேவை பாதிக்கக் கூடாது என்றும் எளிமையாக தனது இறுதி சடங்கு நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியபடி குடும்பத்தினரும் ஊழியர்களும் செயல்படுத்தியது மெய் சிலிர்க்க வைத்தது. அவர் ஒரு மகான். அவரது ஆயிரக் கணக்கான சிஷ்யர்களை அவரது சேவையின் வடிவாக பார்க்கலாம். இவ்வாறு புகழாரம் சூட்டினார்.
பின்னர் சங்கர நேத்ராலயாவின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன் பத்ரி நாத்துடனான தனது 46 ஆண்டுகால மருத்துவ சேவை அனுபவத்தையும், பள்ளி கால தோழரான நல்லி குப்பு சாமி பால்ய நினைவுகளையும் பகிர்ந்தனர்.
கவிஞர் வைர முத்து பேசும் போது, ‘பத்ரி நாத் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்க் கையை நிறைவு செய்துள்ளார்’ என்றார்.
மேலும், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குரு மூர்த்தி, ‘தி இந்து’ பப்ளிகேஷன்ஸ் குழும இயக்குநர் என்.முரளி, சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டனள உறுப்பினர் ராஜு பர்வாலே, தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ், முன்னாள் டிஜிபி ராதா கிருஷ்ணன் ஐபிஎஸ், காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை மருத்துவர் பால ராமச்சந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தி பேசினர். சங்கர நேத்ராலயாவின் பிரதான வளாகத்துக்கு டாக்டர் எஸ்.எஸ்.பத்ரி நாத் பெயர் விரைவில் சூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.