

சென்னை: போதைப் பொருள் ஒழிப்பில் மெத்தனம் காட்டியதாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட போலீஸார் படிப்படியாக வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கஞ்சா, குட்கா, மாவா உட்பட போதை மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் பதுக்கலை முற்றிலும் தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த உத்தரவை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார். அதன்படி, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக சென்னையில் போதை, புகையிலை பொருட்களின் புழக்கத்தை தடுத்து அதில் தொடர்புடையவர்களை கைது செய்துசிறையில் அடைக்க போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படிஅனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த நடவடிக்கையில் சிலர் மெத்தனம் காட்டியதாகவும் சில போலீஸார் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களின் விவரங்கள் உளவுப் பிரிவு போலீஸார்மூலம் சேகரிக்கப்பட்டன.
இதையடுத்துஇப்புகாரில் சிக்கியதாக சென்னையில்உதவி காவல் ஆய்வாளர்கள் உள்பட25-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும்9 காவல் ஆய்வாளர்கள் அடுத்தடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், ஆவடியிலும் காவல் ஆணையர் சங்கர் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த போலீஸாரை ராணிப்பேட்டை உட்படதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக 3உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்கள்பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குற்றச்சாட்டுக்கு உள்ளான போலீஸார் கலக்கம் அடைந்துள்ளனர்.