

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் துளையானூரில் நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும்.
அதன் பிறகு, அங்கிருந்து நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆயிரக் கணக்கான நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அப்போது, பெய்த மழைக்கு 4,507 மூட்டைகளில் இருந்த ரூ.36 லட்சம் மதிப்பிலான 126 டன் நெல் பாதிக்கப்பட்டது. இது குறித்து நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உயர் அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, பணியில் அலட்சியமாக இருந்த குடோன் இளநிலை தர ஆய்வாளர் ரவி, இளநிலை உதவியாளர் சரவணன் ஆகியோர் கடந்த மே மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு, தானியங்களை பாதுகாக்கும் விதமாக துளையானூர், அழியா நிலை உட்பட தமிழத்தின் பல்வேறு இடங்களில் தகர ஷீட்டுகளால் வேயப்பட்ட குடோன்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில், மழையில் நனைந்த நெல் மணிகள் 18 மாதங்களுக்கும் மேலாக குடோனிலேயே வைக்கப்பட்டுள்ளன. உணவுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த நெல் மணிகளை கால் நடை தீவனமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில், “இங்குள்ள 126 டன் நெல் மணிகளை மனிதர்களுக்கான உணவுக்கு பயன்படுத்தக் கூடாது. கால்நடை தீவனத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை நுகர் பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறியபோது, “டெண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 வாரங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மழையால் பாதிக்கப்பட்ட நெல் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.