

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை எனஆட்சியரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்ட மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ( சிஐடியு ) மாவட்டச் செயலாளர் கரு.ராமநாதன் அளித்த மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடியில் இருந்து அரசங்கரை வரை 44 கிலோ மீட்டர் நீள கடற்கரை உள்ளது. இங்கிருந்து நூற்றுக் கணக்கான விசைப் படகு மற்றும் நாட்டுப் படகுகளில் மீனவர்கள் ஏராளமானோர் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரையோர பகுதியில் ஒவ்வொரு மாதமும் ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதன் மூலம், மீனவர்களுக்கான அரசின் நலத் திட்டங்களை பெறவும், பிரச்சினைகளை எடுத்துக் கூறி, தீர்வு காணவும் எளிதாக இருந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக மீனவர் குறைதீர் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திலும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணம் செய்து புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வேண்டியுள்ளது.
அலைச்சல் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வருவது இல்லை. எனவே, கடற்கரையோர பகுதியில் ஒவ்வொரு மாதமும் மீனவர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் சாதிய ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, அம்மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடிய விழிக்கண் குழுவை ஆட்சியர் உடனே கூட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் அளித்துள்ள புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் வெள்ளை நெஞ்சன் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.