Published : 20 Nov 2023 04:06 AM
Last Updated : 20 Nov 2023 04:06 AM
திருச்சி / அரியலூர் / புதுக்கோட்டை / கரூர்: திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில், திரளானோர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உறையூர், துறையூர் ஆகிய 2 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. உறையூர் எஸ்.எம் பள்ளியில் தொடங்கி, அண்ணாமலை நகரில் முடிவடைந்த பேரணிக்கு, ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் ரஜினி காந்த் தலைமை வகித்தார். 400-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
துறையூரில் நடைபெற்ற பேரணிக்கு ஆர்எஸ்எஸ் பிராந்த குடும்ப பிரபோதன் சம்யோஜக் பிரிவு நிர்வாகி பி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். ஆஞ்சநேயர் கோயிலில் தொடங்கி பாலக்கரை, திருச்சி பிரதான சாலை வழியாக துறையூரில் முடிவடைந்தது. இப்பேரணியில் 10 பெண்கள் உட்பட 130பேர் கலந்து கொண்டனர். இரு இடங்களிலும் பேரணி முடிந்த பிறகு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, உறையூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்க சென்ற பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிமை, திருச்சி அரசு மருத்துவமனை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உட்பட 7 பேரை கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் தொடங்கிய பேரணி, பேருந்து நிலைய சாலை, சந்நிதி தெரு வழியாக பெருமாள் கோயிலில் நிறைவடைந்தது. ஆர்எஸ்எஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஞான கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் 150-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் மற்றும் மணமேல்குடியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. திருமயத்தில் அண்ணா சீரணி அரங்கில் தொடங்கிய பேரணி, சத்திய மூர்த்தி மணிமண்டபம், பெருமாள் கோயில், சிவன் கோயில், பேருந்து நிலையம் வழியாகச் சென்று சத்தியமூர்த்தி சிலை அருகே நிறைவடைந்தது. ஓய்வு பெற்ற ஆசிரியர் ராதா கிருஷ்ணன் பேரணியைத் தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.
கோட்டை அமைப்பாளர் பிரசாந்த் குமார், மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணமேல்குடியில் வடக்கூர் முத்துமாரியம்மன் கோயில் அருகே தொடங்கிய பேரணி, தாண்டவ மூர்த்தி நகர், சேது சாலை, சந்தைப் பேட்டை, செங்குந்தபுரம், அகரகம் வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கு ஆர்எஸ்எஸ் மாவட்ட இணைச்செயலர் கணபதி ராஜா தலைமை வகித்தார். மண்டல பொறுப்பாளர் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர் வெங்கமேட்டில் தொடங்கிய பேரணிக்கு ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் குணசேகரன், மணிஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். புளிய மரம் பேருந்து நிறுத்தம் தண்ணீர் தொட்டி, ஏ1 திரையரங்கம், பெரியார் சாலை, திட்டச் சாலை, வெங்கமேடு கடை வீதி வழியாக பேரணி மீண்டும் வெங்கமேட்டில் நிறைவடைந்தது. ஆர்எஸ்எஸ் பேரணி சென்ற அனைத்து பகுதிகளிலும் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT