ODI WC Final | உலகக் கோப்பை இறுதிப்போட்டியைக் காண சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் எல்இடி திரை
சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படும் எல்இடி திரை
Updated on
2 min read

சென்னை: சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மிகப்பெரிய எல்இடி திரையின் மூலம் ஒளிபரப்ப தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாப்பாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் வீழ்த்த முடியாத அணியாக அசுர பலத்துடன் திகழ்ந்தது. எதிர்த்து விளையாடிய 9 அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளைக் குவித்து லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது லீக் சுற்றில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து நெருக்கடியை சந்தித்தது. 5 முறை சாம்பியனான அந்த அணி ஒரு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வேகமெடுத்த அந்த அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆவலை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

அந்தவகையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மிகப்பெரிய எல்இடி திரையில் பொதுமக்கள் காண்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை மட்டும் பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செயய்ப்பட்டுள்ளன.

பெசன்ட் நகர் மற்றும் சென்னை மெரினா கடற்கரையில், விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே உள்ள பகுதியில், மிகப்பெரிய எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. 18 அடி உயரம், 32 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய எல்இடி திரை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை போட்டித் தொடங்குவதற்கு முன்பாக அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் முதல் இங்கு ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

12 மணிக்கு துவங்கும் இந்த நேரடி ஒளிபரப்பை சுமார் 110 மீட்டர் தூரம் வரை ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும், போட்டியைக் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இறுதிப்போட்டியை ரசிகர்கள் அமர்ந்து காணும் வகையில், சென்னை கடற்கரையில் உள்ள மணற்பரப்பை சமப்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி சார்பில் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் போட்டியின்போது, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்பொருட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பெசன்ட் நகர் கடற்கரையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in