IND vs AUS - ODI WC Final 2023 | டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்

IND vs AUS - ODI WC Final 2023 | டூடுல் போட்டு கொண்டாடிய கூகுள்
Updated on
2 min read

புதுடெல்லி: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (நவ.19) நடைபெற இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் மூலம் கவுரவித்துள்ளது. டூடுலை கிளிக் செய்தாலே கிரிக்கெட் ஸ்கோர் வரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுளில் ஒரே சொடுக்கில் கிரிக்கெட் ஸ்கோரை ரசிகர்கள் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும் இன்று இந்தியாவின் அகமதாபாத் நகரத்தின் மீதே குவிந்து இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த உச்சக்கட்ட போட்டியில் கிரிக்கெட் டைட்டன்களான இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சிறப்பான தருணத்தை கூகுள் நிறுவனம் டூடுல் போட்டு கொண்டாடியுள்ளது.

கூகுளின் டூடுல் கிரிக்கெட்டின் ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக, உலகக் கோப்பையை மையமாக வைத்து, மிகவும் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த வராலற்று சிறப்பு மிக்க போட்டியின் ஒவ்வொருத் தருணத்தையும் கொண்டாட உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அழைக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு கடந்த அக்.5-ம் தேதி கோலாகலமாக அகமதாபாத்தில் தொடங்கியது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் 45 லீக் ஆட்டங்கள், 2 அரை இறுதி ஆட்டங்கள் ஆகியவை நாட்டில் உள்ள 10 நகரங்களில் நடந்தன.

இந்த கிரிக்கெட் திருவிழாவில் சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று பகல் 2மணிக்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 1.30 லட்சம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கடைசியாக இரு அணிகளும் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் விளையாடி இருந்தன. அப்போது இந்திய அணி பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. ஆனால் இம்முறை இந்திய அணி பலம் வாய்ந்ததாக திகழ்வதால் அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டு 4-வது முறையாக இறுதிப் போட்டியை சந்திக்கிறது இந்திய அணி. அதேவேளையில் 5 முறை வாகை சூடியுள்ள ஆஸ்திரேலியா 8-வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் வருகை தர உள் ளனர். இவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோரும் இறுதிப் போட்டியை காண்பதற்கு வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in