ஜவஹர்லால் நேரு 134-வது பிறந்தநாள்: ஆளுநர், தலைவர்கள் மரியாதை
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134-வதுபிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி சென்னை கிண்டிகத்திப்பாராவில் உள்ள அவரதுதிருவுருவ சிலை அருகே, அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி கொட்டிய மழையிலும் கிண்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேருவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன்அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநகராட்சி துணை மேயர்மகேஷ்குமார், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா எம்எல்ஏ ஆகியோர் மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,தமிழக சட்டப்பேரவை தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ஹசன்மவுலானா எம்எல்ஏ ஆகியோருடன் சேர்ந்து மரியாதை செலுத்தினார்.
சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பாக ‘நவ இந்தியாவின் சிற்பி’என்ற தலைப்பில் கருத்தரங்கம்,கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு நடைபயணத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத் துறை இணை இயக்குநர் தனசேகர பாண்டியன் தொடங்கிவைத்தார்.
நேருவின் பிறந்தநாள் மற்றும் குழந்தைகள் தினத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், மநீம தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
