

தமிழக அரசின் 20% போனஸ் அறிவிப்பு: தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக் குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20% போனஸ் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள்: "தீபாவளி தீக்காய சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 95 இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 95 மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் நேர்ந்தால் அதற்கு தேவையான மருந்து போன்ற உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்படுகிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணின் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி:ஸ்ரீரங்கத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாள், முதல்நொடியில் கடவுளை நம்புபவன் முட்டாள் என்றவரின் சிலை, கொடிக்கம்பம் இங்கே அப்புறப்படுத்தப்படும். அதற்கு பதிலாக ஆழ்வார்கள், நாயன்மார்கள், தமிழ் புலவர்கள், சுதந்திர வீரர்கள் சிலை வைக்கப்படும். அதேபோல இந்து சமய அறநிலையத் துறை என்பது அமைச்சரவையில் இருக்காது. இது பாஜகவின் சூளுரை” என்று பேசினார்.
இதற்கு பதிலடி தந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “"ஆத்திகர்களும், நாத்திகர்களும் ஒருசேர வாழும் நாடு இந்த நாடு. இதில் பெரியார் கொள்கைகளோடு, இந்து மதத்தையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான், இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது.
கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில், எத்தனை குட்டிக்கர்ணங்கள் அடித்தாலும், எத்தனை ஐடி ரெய்டுகள் நடத்தினாலும், எத்தனை அமலாக்கத் துறை ரெய்டுகள் நடத்தினாலும் கிடைக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது திராவிட மண்” என்று கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து, அவரது தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சுக்காக மன்னிப்பு கோரிய நிதிஷ் குமார்: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையான நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜக எம்எல்ஏக்கள் ‘அவர் பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தி சட்டப்பேரவையில் முழக்கங்கள் எழுப்பினர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம்!: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. ஓர் அணியாக, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என மூன்று ஃபார்மெட்களிலும் இந்திய அணியே முதலிடத்தை அலங்கரித்துள்ளது. அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸமை பின்னுக்குத் தள்ளி, இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதன் முறையாக முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் மொகமது சிராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
பாஜகவின் கொள்கை: பிரியங்கா சரமாரி தாக்கு: அரசு நடத்தும் நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதே பாஜகவின் கொள்கையாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்தியாவால் முடியும்” - ஜோர்டான் தூதர்: காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை இந்தியாவால் நிறுத்த முடியும் என்று இந்தியாவுக்கான ஜோர்டான் தூதர் சலாம் ஜமீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், உலகில் இந்தியா ஒரு வளரும் சக்தி. சர்வதேச விவகாரங்கள் பலவற்றில் இந்தியா தலையிட்டுள்ளது. இந்தச் சூழலில், மேற்காசியாவில் நிலவி வரும் மோதலுக்குத் தீர்வு காண இந்தியா சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும். இதன்மூலம், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்" எனத் தெரிவித்தார்.
“பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவுக்கு எரிபொருள் கிடையாது”: ஹமாஸ் - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 33-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் காசா நகரின் மையப்பகுதிக்குள் நுழைத்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு நாடுகள் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்பதை எங்கும் வலியுறுத்தவில்லை.
“50,000 பேருக்கு 4 கழிவறைகள் மட்டுமே!”: காசா நிவாரண முகாம்களில் பணிபுரிந்துவிட்டு கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் ஒருவர், தனது சக ஊழியர்கள் குறித்தும், தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காசாவில் பாதுகாப்பான இடம் என்று ஒன்றுகூட கிடையாது. எங்களைச் சுற்றிலும் குண்டுகள் வெடித்தன. என்னுடன் பணியாற்றிய சில சக ஊழியர்கள் ஒரு நொடி கூட மக்களை விட்டு வெளியேறவில்லை.
சில நாட்கள் கம்யூனிஸ்ட் பயிற்சி மையத்திலிருந்தோம். அங்கு சுமார் 35,000 பேர் இருந்தனர். 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்த ஒரு முகாமில் நான்கு கழிவறைகள் மட்டுமே இருந்தன. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தண்ணீர் விநியோகிக்கின்றன.
26 நாட்களுக்குப் பிறகு என்னுடைய குடும்பத்தாருடன் நேரம் செலவிடுகிறேன். இப்போதுதான் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் உணர்கிறேன். ஆனால், என்னுடைய இதயம் காசாவில்தான் உள்ளது. அது சாசாவிலேயே இருக்கும். நான் பணியாற்றிய பாலஸ்தீனிய மக்கள் என் வாழ்க்கையில் நான் சந்தித்த நம்பமுடியாத மனிதர்களில் சிலர்” என்றார்.