நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்தம் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதுதவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29 கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டைபோலவே அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in