

விருதுநகர்: "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் வருவதற்கு முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றால், நானே அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவேன்" என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்கக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி முல்லை தெருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவஞானபுரம் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது, மத்திய அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, மாணிக்கம் தாகூர் எம்.பி கூறுகையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மத்திய அரசைக் கண்டித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
தொடர்ந்து 14 வாரங்களாக தமிழகத்தில்பணியாற்றும் 22 லட்சம் தாய்மார்களின் உழைப்பை மத்திய அரசு சுரண்டியுள்ளது. தீபாவளிக்கு முன்பாக தொழிலாளர்களுக்கு உழைத்த பணம் கிடைக்க வேண்டும். 2,250 கோடி தமிழகத்துக்கு வரவேண்டிய தொகையை மத்திய அரசு தடை செய்துள்ளதாக முதல்வரின் கடிதம் கூறுகிறது. விருதுநகர் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.89 கோடி வரவேண்டும். தீபாவளிக்கு முன்னாள் இந்த பணம் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் வருவதற்கு முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்றால், நானே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவேன் மிகத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இண்டியா கூட்டணிக்கு கமல்ஹாசன் வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அவர் மதச்சார்பற்ற அரசியலுக்கு வித்திட்டவர். தொடர்ந்து அதற்காக குரல் கொடுப்பவர். ராகுல் காந்தி யாத்திரையில் டெல்லியில் கலந்துகொண்டவர். அவரது குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்கு எங்கள் ஆதரவை தெரித்துக்கொள்கிறோம். ஏழை, நடுத்தர மக்களுக்கான ரயில்களை இயக்குவதை மத்திய அரசு குறைத்துக்கொண்டு வருகிறது. வந்தேபாரத் ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஜேதஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். ரயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும். கட்டணத்தையும் குறைக்க வேண்டும். மோடி கொண்டு வந்த ஜிஎஸ்டி சீரான ஜிஎஸ்டியாக இல்லை. வைரம் வாங்குவோருக்கு 1.5 சதவீத வரியும், அரிசி வாங்குவோருக்கு 6 சதவீத வரியும் வசூலிக்கப்படுகிறது. இந்த பாரபட்சமான ஜிஎஸ்டியை மாற்ற வேண்டும் என்பதில் ராகுல் தெளிவாக உள்ளார். ராகுல் காந்தி பாரத பிரதமரானால் ஜிஎஸ்டி முறை மாற்றப்படும். தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும்" என்றார்.