Published : 07 Nov 2023 12:54 PM
Last Updated : 07 Nov 2023 12:54 PM

எழுப்பூர் மருத்துவமனைக்கு சென்னை ஐஐடியில் உருவான குடிநீர் கருவியைப் பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

மநீம தலைவர் கமல்ஹாசன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தரும்  RO இயந்திரத்தை வழங்கினார்

சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இந்தக் கருவியை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளையொட்டி, "வாயு ஜல்" என்ற குடிநீர் இயந்திரத்தை வழங்கினார். இது காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தரும் RO இயந்திரம் ஆகும். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது: "இங்கே வாயு ஜல் எனும் ஒரு இயந்திரத்தை வழங்கியிருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களாக, ராஜ்கமல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் நீரை நான் பருகி வருகிறேன். ஆரோக்கியமாக இருந்து வருகிறேன்.

அது, இந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு பயன்பட வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது இதை பயன்படுத்தலாம். இவ்வாறு நான் செய்வதன் மூலம், இதைவிட அரசு பன்மடங்கு பெரிதாக செய்துகாட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முன்மாதிரி முயற்சியான இதைப் பார்த்து, இந்த இயந்திரத்தின் மூலம் கிடைக்கும் பயன்களை புரிந்துகொண்டால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதை நிறுவுவதற்கு என்னைப் போன்றவர்கள் அரசுக்கு உதவியாக கரம் கோர்ப்பார்கள்.

இந்த கருவியை உருவாக்கியவர்கள், இந்தியர்கள் அதுவும் தமிழர்கள்.ஐஐடியில் உருவாக்கப்பட்ட கருவி இது. இதன்மூலம், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில், மாசில்லாத குடிநீரை நாம் அனைவரும் பருக முடியும். இந்த கருவியை ஒரு முன்மாதிரியாக அரசுக்கு பரிந்துரைக்கிறேன். அரசியல் கட்சிகளின் தொடர்பு இருக்கக்கூடாது என்பதற்காக, இதை கமல் பண்பாட்டு மையம் மூலம் செயல்படுத்துகிறோம். இங்கு வந்திருப்பவர்கள் கட்சி சார்ந்தவர்கள் அல்ல, மனிதம் சார்ந்தவர்கள்" என்றார்.

அப்போது இதேபோன்று பிற மாவட்டங்களில் இந்த கருவியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசுக்கு இதுபோன்ற கருவிகளை அமைத்தால், நன்றாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறோம். அதாவது இந்த கருவியைப் பொருத்தி அதன்மூலம் கிடைக்கும் நன்மைகளை செய்து காட்டுகிறோம். கோவையில், மநீம சார்பில் ஏற்கெனவே ஒரு பள்ளிக்கூடத்தில் இதுபோன்ற கருவியைப் பொருத்தியிருக்கிறோம். எங்களுடைய அலுவலகத்தில் இருக்கிறது. இன்னும் செய்யலாம். எனவே, இப்படி ஒரு கருவியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இதுபோல் தொடர்ந்து செய்வதற்கு, என்ன உதவிகள் கேட்டாலும் நாங்கள் செய்வோம்" என்றார்.

அப்போது, இந்த நிகழ்ச்சி திமுக கூட்டணிக்கு அச்சாரமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நாங்கள் எல்லாம் மனிதர்கள். எங்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அமைச்சர்களுக்கு ஒரு கட்சி இருக்கிறது. நல்லெண்ணம் தான் எங்களை இங்கே ஒன்றிணைத்திருக்கிறது. எனவே, யாரும் அவர்களுடைய கட்சியைவிட்டுவிட்டு வரவேண்டியது இல்லை. ஆனால், மனிதநேயத்தை எப்போதும் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் விடவேண்டியது இல்லை" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் மநீம கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x