

தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு: தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நவம்பர் 13-ம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நவம்பர் 13 அன்று ஒருநாள் மட்டும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 18 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்: "மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சார்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மீன்பிடிப் படகுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு தடை கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சனாதன ஒழிப்பு குறித்து பேச்சு: உயர் நீதிமன்றம் அதிருப்தி: “சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, தனது கடமையை செய்யத் தவறி குற்றம் புரிந்துள்ளது” என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது மக்களுக்குள் சாதி, மதம், மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும். குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக மது, போதைப்பொருட்கள், ஊழல், தீண்டாமை, சமூக தீமை ஆகியவற்றை ஒழிப்பது குறித்து பேசுவதில் கவனம் செலுத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனிடையே "சனாதனம் குறித்து நான் பேசியதில் எதுவும் தவறு கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திப்போம். நான் பேசிய வார்த்தைகளை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். எனது கொள்கையைத்தான் நான் பேசியிருக்கிறேன்" என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்க வாய்ப்பு: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு: “இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கி அதேசமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசால் வழிவகை செய்துள்ள ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
‘ஆளுநர்கள் சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’: “ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அவர்கள், கொஞ்சம் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்று மசோதாக்கள் தேக்கம் தொடர்பாக ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்: தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசமாக உள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு 488 ஆக இருந்தது. காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளை நவம்பர் 10-ம் தேதி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கமல் - மணிரத்னம் படத் தலைப்பு ‘தக் லைஃப்’: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. “என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரன்” என்று தனக்கே உரிய ஸ்டைலில் கமல் இன்ட்ரோ கொடுக்கும் ஆக்ஷன் நிரம்பிய அறிமுக வீடியோ கவனம் ஈர்த்துள்ளது.
‘காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலி’: கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய போர் இன்றும் நீடித்து வரும் நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதனிடையே இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களைக் கொல்ல இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி குற்றம்சாட்டியுள்ளார்.