

சென்னை: கட்சியின் வளர்ச்சிக்காக விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது என அதிமுக தரப்பிலும், சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது எனஅறிவிக்கக் கோரி வி.கே.சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலா தொடர்ந்திருந்த அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2016-ம் ஆண்டு இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கான நோட்டீஸ் அனுப்பியது யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாரயண், 2016 மற்றும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டங்களுக்கு தலைமை கழகம் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், வேட்பாளருக்கான சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளதாகவும், தேர்தல் ஆணையமும் இதை அங்கீகரித்துள்ளது எனத் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுகவின் சட்டவிதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும், பழைய விதிகளை அடிப்படையாக கொண்டு சசிகலா வழக்கு தொடர முடியாது எனவும் அவர் வாதிட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கபட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கடந்த ஆண்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கபட்டுவிட்டதாகவும், தற்போது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை நவம்பர் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.