இந்து கோயில்களின் செயல்பாடு, சொத்து விவரங்களை ஆராயும் பறக்கும் படை: மதுரையில் பணிகள் தீவிரம்

இந்து கோயில்களின் செயல்பாடு, சொத்து விவரங்களை ஆராயும் பறக்கும் படை: மதுரையில் பணிகள் தீவிரம்
Updated on
1 min read

மதுரை: இந்து கோயில்களின் செயல்பாடு, சொத்து விவரங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழு முதல்கட்டமாக மதுரையில் பணியை தொடங்கியது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் சுமார் 44,000 பெரிய மற்றும் சிறிய கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் நடக்கும் அனைத்து நிர்வாக செயல்பாடு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 4 துணை ஆட்சியர்கள் கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆட்சியர் லட்சுமணன், மதுரை ஆலய நிலங்கள் தனி தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் கடந்த இரு நாட்களாக மதுரையிலுள்ள திண்டுக்கல் ரோடு தண்டாயுதபாணி கோயில், மதன கோபாலசாமி கோயில், கூடலழகர், திருமோகூர் காளமேக பெருமாள் கோயில்களில் ஆய்வு மேற்கொண்டனர். வரவு,செலவு கணக்கு, கோயில் சொத்து விவரம், சுகாதாரம், சமையல் கூடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். மீனாட்சி கோயில் அன்னதான கூடம் பராமரிப்பு தொடர்பாக ஆய்வு குழுவினர் சில ஆலோசனையை வழங்கியுள்ளனர். மேலும், இக்கோயிலுக்கு சொந்தமான அனுப்பானடி பகுதியிலுள்ள நில அளவை பணியை மேற்பார்வையிட்டனர்.

இந்த ஆய்வுக் குழுவினர் கூறுகையில், ''அனைத்து கோயில்களிலும் அடிப்படை வசதி, சொத்து விவரம், நிலங்கள் மற்றும் வரவு, செலவு கணக்கு விவரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் ஆய்வு செய்தோம். முதல் கட்டமாக மதுரையில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in