மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழா | 788 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், மும்பை நிகர்நிலை பல்கலை. துணைவேந்தர் காமாட்சி முதலி, காமராசர் பல்கலை. துணைவேந்தர் ஜெ.குமார், தேர்வாணையர் தர்மராஜ். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், மும்பை நிகர்நிலை பல்கலை. துணைவேந்தர் காமாட்சி முதலி, காமராசர் பல்கலை. துணைவேந்தர் ஜெ.குமார், தேர்வாணையர் தர்மராஜ். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில்,ஆளுநர் ஆர்.என்.ரவி 788 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

பல்கலை. வளாகத்தில் நடைபெற்ற விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலை. பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். துணைவேந்தர் ஜெ.குமார் வரவேற்றார்.

மும்பை எச்பிஎன்ஐ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் யூ.காமாட்சி முதலி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து, 788 மாணவ,மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். பின்னர், பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் ரவி சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார்.

விழாவை புறக்கணித்த அமைச்சர்: விழாவில், மதுரை ஆட்சியர் சங்கீதா, பல்கலை. தேர்வாணையர் தர்மராஜ், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தவமணி கிறிஸ்டோபர், நாகரத்தினம், தங்கராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

விடுதலைப் போராட்ட தியாகிசங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர்பட்டம் வழங்க பல்கலை. ஆட்சிக்குழு 2 முறை பரிந்துரைத்தும், ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணை வேந்தருமான பொன்முடி விழாவைப் புறக்கணித்தார்.

ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு எழுந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் பங்கேற்க வந்த மாணவர் ஒருவரின் குடும்பத்தினர் திமுக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்தனர். அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். மேலும், கொடியை கழற்றி காருக்குள் வைக்குமாறு அறிவுறுத்தினர். விழாவுக்குச் செல்வோர் அனைவரும் வெடிகுண்டு தடுப்பு சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 6 பேரில் 3 பேர் மட்டுமேபங்கேற்றனர். ஆட்சிப் பேரவைஉறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை. உதவிப் பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோர் ஆளுநரிடமிருந்து முனைவர் பட்டம் பெற மறுத்து, விழாவில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in