

காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழா சலசலப்புகள்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா மு.வ.அரங்கில் வியாழக்கிழமை நடந்தது. சுதந்திர போராட்ட தியாக சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக சிண்டிக்கேட், சென்ட் 2 முறை பரிந்துரை செய்தும், இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காததால் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார். மேலும், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு அதிகரித்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மும்பை நிகர் நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் காமாட்சி முதலி, “பெண்கள் உயர் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம்” என்று பாராட்டு தெரிவித்தார். இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பேசவில்லை.
போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்த இந்த விழாவில், சிண்டிகேட் உறுப்பினர்கள் 6 பேரில் 3 பேர் மட்டுமே பங்கேற்றனர். செனட் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கென ஒதுக்கிய இருக்கைகள் காலியாக இருந்தன.
அதேபோல், உதவி பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோர் ஆளுநர் கையில் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்து, பங்கேற்வில்லை என்ற தகவலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய கலைந்துரையாடல் நிகழ்வில் நடத்தினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிருப்தி எழுந்தது.
இதனிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி மறுத்ததால் போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ள பாதிப்பு பகுதிகள் 3,770 ஆக குறைவு - தமிழக அரசு: தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு வெள்ளத் தணிப்பு பணிகளின் காரணமாக 4,399 ஆக இருந்த பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள், தற்போது 3770 ஆக குறைந்துள்ளது" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் கூறியுள்ளார்.
‘பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குக’: நெல்லையில் பட்டியலின இளைஞர்களின் ஆடைகளைக் களைந்தும், அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்தியுள்ள வெறித்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் இருவருக்கு நிகழ்த்தப்பட்ட துன்புறுத்தல் தொடர்பான வன்கொடுமை வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
‘நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிக்கு உரிமையுண்டு’: 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 'நீட்' தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
“திரவுபதி துகிலுரிதல் படலம்”: மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக திரிணமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை மக்களவை நெறிமுறைக் குழு வியாழக்கிழமை விசாரணை செய்த நிலையில், அந்தக் குழு நடந்துகொண்ட விதத்தில் அதிருப்தி அடைந்த மஹுவா மொய்த்ரா, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டானிஷ் அலி கூறுகையில், “மஹுவாவிடம் கேட்கப்பட்ட தனிப்பட்ட கேள்விகள் அனைத்தும் திரவுபதி துகிலுரிதல் படலம் போல இருந்தது” என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. கிர்தாரி யாதவ் கூறும்போது“அவர்கள் ஒரு பெண்ணிடம், அவரின் தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் கேட்டனர். தனிப்பட்ட விஷயங்களைக் கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை. அதனால் நாங்கள் வெளிநடப்புச் செய்தோம்" என்று கூறினார்.
இதனிடையே, மக்களவை நெறிமுறைக் குழு தலைவர் வினோத் சோன்கர் கூறுகையில், "பதில் சொல்வதற்கு பதிலாக மஹுவா கோபமடைந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை குழு அமர்ந்து பேசி முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
அதேவேளையில், “அவர்கள் எல்லா வகையான அசிங்கமான கேள்விகளையும் கேட்கின்றனர். அவர்கள் எதையெல்லாமோ எடுத்துவைத்து, எதையெல்லாமோ பேசுகிறார்கள்” என்று ஆவேசமாக மவுஹா மொய்த்ரா கூறினார்.
தமிழக பாணியில் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு: தமிழக அரசு பாணியில் கேளர ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மீது அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேரள அரசு கோரியுள்ளது.
‘இண்டியா’ கூட்டணி அணுகுமுறையில் நிதிஷ் குமார் அதிருப்தி: “நாங்கள் அனைத்துக் கட்சிகளுடனும் பேசி வருகிறோம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது” என பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
“சிறையைக் கண்டு நான் அஞ்சவில்லை”- கேஜ்ரிவால் ஆவேசம்: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அவர் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகிறார் என்று செய்திகள் வெளியாகின. அவர் கைதும் செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, “மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, நான் சிறையில் இருப்பேனா அல்லது வெளியில் இருப்பேனா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், சிறையைக் கண்டு நான் அஞ்சவில்லை” என்று ஆவேசமாக கூறினார்.
“அகதிகள் முகாம் மீதான தாக்குதல் போர் குற்றங்களுக்கு சமம்”: காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல், போர் குற்றங்களுக்கு சமமானது என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 25 நாட்களையும் கடந்துவிட்ட நிலையில், செவ்வாய் அன்று காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பையில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நாடு திரும்பியிருப்பதால் உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.