Published : 02 Nov 2023 06:14 AM
Last Updated : 02 Nov 2023 06:14 AM

சென்னை | உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சுங்கத்துறையில் இருந்து மோப்ப நாய் இராணிக்கு ஓய்வு

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மோப்ப நாய் இராணி.

சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் இருந்து இராணி மோப்ப நாய் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகத்தில் உள்ள கார்கோ சரக்கக பகுதிக்கு வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தது. அவற்றை கண்டுபிடிப்பதற்காக கடந்த 2022-ல் இராணி என்ற மோப்ப நாய், சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.

போதைப் பொருள் கடத்தலை கண்டுபிடிப்பதில் நிபுணராக செயல்பட்டு வந்த சுமார் 3 வயது உடைய இராணி மோப்ப நாய், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனாலும் இரானி உடல் நல பாதிப்பை பற்றி கவலைப்படாமல், சிறப்பாக பணியாற்றி வந்தது.

கட்டாய ஓய்வு: ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் இராணி நோய்வாய்ப் பட்டதால் கவலை அடைந்தனர். விலங்கியல் நிபுணர்கள் மற்றும் விலங்குகள் மருத்துவ நிபுணர்கள், இரானியை பரிசோதித்துவிட்டு, அதற்கு கட்டாய ஓய்வு அளிப்பது நல்லது என்று தெரிவித்தனர். இதையடுத்து, மோப்ப நாய் இராணிக்கு அக்.31-ம் தேதி மாலையுடன் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில், இராணிக்கு, சுங்கத்துறை அதிகாரிகள் பிரிவு உபசார நிகழ்ச்சி செய்து வழி அனுப்பினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற மோப்பநாய் இராணி, பஞ்சாபில் உள்ள மத்திய மோப்ப நாய்கள் பிரிவில், ஓய்வுபெற்ற, உடல் நலம் பாதிக்கப்பட்ட நாய்கள் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கு இந்த மோப்ப நாய்க்கு உரிய சிகிச்சை அளித்து பராமரிக்கப்படவுள்ளது. மோப்ப நாய் பிரிவில், இராணியின் இடத்தை நிரப்புவதற்கு, மேலும் 2 மோப்ப நாய்கள் வெகு விரைவில் வரவுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x