தேவர் ஜெயந்தி முதல் ஆந்திர ரயில் விபத்து, கேரள குண்டுவெடிப்பு அப்டேட் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.30, 2023

தேவர் ஜெயந்தி முதல் ஆந்திர ரயில் விபத்து, கேரள குண்டுவெடிப்பு அப்டேட் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.30, 2023
Updated on
2 min read

ஆந்திர ரயில் விபத்து பலி 14 ஆக அதிகரிப்பு: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை கிழக்கு கடற்கரை ரயில்வே உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு ரயில்களிலுமே ‘கவச்’ பாதுகாப்பு அமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை ரயில்வே கோட்ட மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது.

கேரள குண்டுவெடிப்பு பலி 3 ஆக அதிகரிப்பு - என்எஸ்ஜி விசாரணை: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு ஜெபக் கூட்டத்தில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 17 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், குண்டுவெடிப்பு தொடர்பாக யாரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், ஊகங்கள் அடிப்படையிலான பிரச்சாரங்களை, வதந்திகளைப் பரப்பக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக டொமினிக் மார்டின் என்ற நபர் போலீஸில் சரணடைந்ததும், அவரது வாக்குமூலத்தை போலீஸ் பதிவு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

“ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் பரப்புகிறது” - முதல்வர்: “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. ஆளுநர் மாளிகையின் எதிரே உள்ள சாலையில்தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல் துறை வெளியிட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய்யைப் பரப்புகிறது. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகமாக மாறியிருப்பது வெட்கக்கேடானது. இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது திராவிடம். இதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை: தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சசிகலா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும், பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருக்கா வினோத்துக்கு 3 நாள் போலீஸ் காவல்: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாஜக நிர்வாகியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில், அக்கட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் கெடு: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பிற சிவசேனா எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க விவகாரத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

காசா மருத்துவமனைகளில் நோயாளிகள் தவிப்பதாக ஐ.நா தகவல்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவின் அல்-குத்ஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் குண்டுவீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவை புரட்டிபோட்ட ‘ஓடிஸ்’ சூறாவளி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவை தாக்கிய 'ஓடிஸ்' சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் சுமார் 36 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in