Published : 30 Oct 2023 04:41 PM
Last Updated : 30 Oct 2023 04:41 PM

ஆந்திர ரயில் விபத்து பலி 14 ஆக அதிகரிப்பு; இரு ரயில்களிலும் 'கவச்' இல்லை என தகவல்

விபத்துப் பகுதியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்.

விஜயநகரம்: ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை கிழக்கு கடற்கரை ரயில்வே உறுதி செய்துள்ளது. இந்நிலையில், விபத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு ரயில்களிலுமே ’கவச்’ பாதுகாப்பு அமைப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை ரயில்வே கோட்ட மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், விபத்தில் காயமடைந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விஜயநகர் அரசுப் பொது மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவர் விபத்துப் பகுதிக்குத்தான் செல்வதாக இருந்தது. ஆனால், அந்தப் பகுதியில் ரயில்வே பாதையை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருவதால் தான் அங்கு செல்வதால் வேலை தடைபடலாம் எனக் கருதி அவர் மருத்துவமனைக்குச் சென்றதாக முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

கவச் என்றால் என்ன? - கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ரயில்கள் பாதுகாப்புக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான 'கவச்'-ஐ அறிவித்தது. இதற்காக மத்திய அரசின் ரிசேர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனுக்கு மூன்று இந்திய நிறுவனங்கள் இதனை உருவாக்கிக் கொடுக்க, இந்திய ரயில்வே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கவச் என்ற சொல் கவசம் - பாதுகாப்பு என்பதைக் குறிப்பதாகும்.

கவச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்பிஏடி, சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனிமூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் அலர்ட் செய்யும். எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.

இரு ரயில்களிலும் இல்லை: இந்நிலையில், ஆந்திராவில் விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் கவச் தொழில்நுட்பம் இல்லை என்று ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், பாலசா பயணிகள் ரயிலானது மத்திய லைனில் சென்று கொண்டிருந்தது. அது வேகத்தைக் கட்டுப்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் ராயகடா பயணிகள் ரயில் சிக்னலைக் கடந்து பின்னால் இருந்து பலாசா ரயில் மீது மோதியுள்ளது. இதில் பலாசா ரயிலின் மூன்று பெட்டிகளும் இன்ஜினும் ராயகடா ரயிலின் இரண்டு பெட்டிகளும் சேதமடைந்தன. இந்த ரயில் தடம் சென்னை - கொல்கத்தா ரயில் செல்வதற்கான முக்கியப் பாதை என்பதால் அந்தப் பாதையை சீரமைப்பதில் அதிகாரிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்" என்றார்.

ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் மிக மோசமான ரயில் விபத்து நடந்தது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட் விபத்தில் 260-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயின. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து கருதப்படுகிறது. இந்த ரயில் விபத்து நடந்த பகுதியில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவச்’ (Kavach) என்ற தொழில்நுட்பம் இல்லை என்ற தகவல் வெளியாகி சர்ச்சையானது. அப்போதே பல தரப்பிலிருந்தும் ரயில்வேயில் கவச் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது பற்றி கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று நடந்த விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலுமே கவச் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஹெல்ப்லைன் எண்கள்: இந்நிலையில், ரயில் விபத்து பற்றி விவரம் அறிய கண்டகப்பள்ளி (8978081960), விஜயநகரம் ( 08922-221206, 08922-221202, 9493589157), ஸ்ரீகாகுளம் சாலை (08942-286213, 286245) என மூன்று இடங்களில் உதவி எண்கள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மற்றும் பலாசா ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உதவிக்கு வந்த உள்ளூர்வாசிகள்: ரயில் விபத்து நடந்த சில நிமிடங்களில் கண்டகப்பள்ளி, அலமண்டா, கோத்தவாசலா பகுதிகளில் இருந்து பொது மக்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதலில் அவர்கள் ரயில் தடம் புரண்டதாக மட்டுமே நினைத்து வந்துள்ளனர். ஆனால், விபத்தின் தீவிரத்தைப் பார்த்த பின்னர் அப்பகுதி வாசிகள் தண்ணீர், பால், உணவுப் பொட்டலங்கள் எனத் தங்களால் இயன்றதை எடுத்துக் கொண்டு விபத்துப் பகுதிக்கு வந்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர். சிலர் தங்களின் செல்போன்களைக் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் சொல்ல உதவியுள்ளனர். அதேபோல் மீட்புப் பணிகளிலும் உள்ளூர்வாசிகள் உதவியதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x