Published : 29 Jun 2019 12:04 pm

Updated : 29 Jun 2019 12:25 pm

 

Published : 29 Jun 2019 12:04 PM
Last Updated : 29 Jun 2019 12:25 PM

வெங்காயம் கிருமி நாசினியா? வெட்டி வைத்த வெங்காயத்தை மறுநாள் பயன்படுத்தலாமா, கூடாதா?- சித்த மருத்துவர் விளக்கம்

காலை எழுந்தவுடன் வாட்ஸ் அப், பின்னர் கணிசமான நேரத்தைப் பறிக்கும் ஃபேஸ்புக், அவ்வப்போது ட்விட்டர் என சமூக வலைதளங்களை வரம்பற்று முறையற்றுப் பயன்படுத்துவோர்தான் அதிகமாக இருக்கின்றனர்.

இவர்கள்தான் சமூகவலைதளப் போராளிகள், திடீர் எழுத்தாளர்கள், அதிரடி சினிமா விமர்சகர்கள், அரசியல் ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள் என அவ்வப்போது பல்வேறு அவதாரங்களை எடுத்து நம்மை அதிர வைப்பவர்கள்.


சில நேரங்களில் நாம் படிக்கும் வாட்ஸ் அப் தகவல் நம்மை "ஓ இப்படியும் ஒன்று இருக்கிறதோ?!" என்று நம்பவைக்கும் சூழலுக்குத் தள்ளும்.

அப்படித்தான் அண்மையில் ஒரு விஷயத்தை வாட்ஸ் அப் ஃபார்வர்ட் மெசேஜில் படிக்க நேர்ந்தது. வெங்காயத்தின் மகத்துவம் பற்றி அதில் எழுதப்பட்டிருந்தது. அதனைச் சுருக்கமாகக் கீழே கொடுக்கிறேன்.

ஒரு ஊரில் திடீரென பயங்கரமான நோய் பரவி கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர். மருத்துவர்களும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுமே என்ன செய்வது என்று தெரியாது குழம்பியிருந்தனர். ஒவ்வொரு வீட்டிலுமே நோய் தாக்கம் இருந்தது. ஆனால், அந்த ஊரில் ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் மட்டும் யாருக்குமே அந்தக் கொடிய நோய்த் தொற்று ஏற்படவில்லை.

ஆச்சர்யமடைந்த ஆராய்ச்சியாளர்கள் உடனே அந்த விவசாயியின் வீட்டுக்குச் சென்றனர். உங்கள் வீட்டில் மட்டும் எப்படி யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று விசாரித்துள்ளனர்.

ஆனால் அந்த விவசாயிக்கு அவர்கள் கேட்ட விவரத்துக்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை. அப்போதுதான் அந்த வீட்டினுள் மூலையில் ஆங்காங்கே வெங்காயம் வெட்டி வைத்திருப்பதைப் பார்த்து அந்த விவசாயிடம் ஏன் இப்படிச் செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளனர்.

 

 

அதற்கு அந்த விவசாயி, நாங்கள் காலங்காலமாக இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார். அந்த வெங்காயங்களை எடுத்துச் சென்று பரிசோதித்த விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்தனர். அதில் குறிப்பிட்ட நோயை பரப்பிக் கொண்டிருந்த கிருமி செயலற்று இருந்தது. அதன்பின்னர் அதுவே மருந்தாகியுள்ளது.

இந்தக் கதையுடன் ஒரு பரிந்துரையும் இருந்தது, நாமும் நம் வீட்டில் படுக்கையறையில் படுக்கைக்கு அடியில் வெங்காயத்தை வெட்டி வைத்துத் தூங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் ஒரு சமையல் குறிப்பும் இருந்தது. வெட்டி வைத்த வெங்காயத்தை மறுநாள் சமையலுக்குப் பயன்படுத்துவது கேடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டபோது தேனியைச் சேர்ந்த சித்த மருத்துவர் சிவ முருகேசனிடன் பேசினோம். அப்போது அவர் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வாட்ஸ் அப்பில் வந்த தகவல் பற்றி உங்களிடம் சந்தேகம் கேட்க வேண்டும் என்று அந்தக் கதையைக் கூறி 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் விளக்கம் கேட்டோம்.

அதற்கு சித்த மருத்துவர் சிவமுருகேசன் கூறியதாவது:

இந்தக் கதை உண்மைதானா என்று எனக்குத் தெரியாது. ஆனால் வெங்காயம் கிருமி நாசினி என்பது உண்மை. பொதுவாக அம்மை நோய் வந்தால் கழுத்தைச் சுற்றி சின்ன வெங்காய மாலை அணிவித்துவிடுவார்கள். நீங்கள்கூட அதைப் பார்த்திருக்கலாம். சின்ன வெங்காயத்துக்கு நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்தும் மகிமை இருக்கிறது. இப்போது வெளிநாட்டில் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

சின்ன வெங்காயத்தை தலையில் அரைத்துத் தடவும் பழக்கம்கூட நம் மக்களிடம் உண்டு. அதுவும் நவீன காலத்தில் எப்படி உருப்பெற்றிருக்கிறது என்பதை நீங்கள் தொலைக்காட்சி விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.

நம் சித்தர்கள் பல்வேறு மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்துச் சென்றுள்ளனர். ஆனால், நம்மில் பலருக்கும் நம் மருத்துவம் மீது முழுமையான நம்பிக்கையில்லை. அதனால்தான் அதே விஷயத்தை ஏதாவது ஒரு பெருநிறுவனம் காப்புரிமை பெற்று தங்கள் பிரத்யேகப் படைப்பாக வெளியிட்டால் அதன் பின்னால் ஓடுகிறோம்.

20 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் பேறுகால மருத்துவமனைகளுக்குச் சென்று தொப்புள் கொடியைத் தருமாறு கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ பில்லி, சூனியம் செய்யும் நபர் என்பதுபோல் என்னைப் பார்ப்பார்கள். தொப்புள் கொடியுடன் புகையிலை இணைத்து இன்னும் சில மூலிகைகள் சேர்த்து கல் அடைப்பு, நீர் அடைப்பு ஆகியனவற்றிற்கு மருந்துகள் கொடுப்போம். ஆனால், இப்போது ஒவ்வோர் பேறுகால மருத்துவமனையிலும் ஸ்டெம் செல் வங்கி என்று ஒன்று தொடங்கியுள்ளனர். தொப்புள் கொடி செல்கள் பல்வேறு நோய்களுக்கான தீர்வு என்பது அறிவியல்பூர்வமாக உறுதியான பின்னர் மக்கள் அதனை நம்பத் தொடங்கியுள்ளனர்.

இன்னும் சில குறிப்புகளைச் சொல்கிறேன். நம் குழந்தைகள் கையில் வசம்பினால் ஆன வளையல் அணிவிப்பது வழக்கம். வசம்பு கட்டியிருந்தால் குழந்தையின் அருகே பூச்சிகள் அண்டாது. வயல்களில் வேலை செய்யும் பெண்கள் குழந்தைகளை மரத்தடியில் தொட்டிலில் இட்டுச் செல்வர். அப்போது குழந்தைகளிடம் எந்த ஒரு விஷ ஜந்தும் அணுகாமல் இருப்பதற்கு வசம்பு வளையம் பெரும் உதவியாக இருக்கும்.

இதனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம் சித்தர் பாடல்களில் எழுதி வைத்துள்ளனர்.

நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன வெங்காயம் பற்றிய வாட்ஸ் அப் ஃபார்வர்டும் அப்படியானதுதான். மேலும், அதில் குறிப்பிட்டுள்ளதுபோல் வெங்காயத்தை வெட்டிவைத்து அதனை மறுநாள் சமைப்பது உகந்தது அல்ல. வெங்காயம் மட்டுமல்ல எந்த ஒரு காய்கறியாக இருந்தாலும் 3 மணி நேரத்தில் அதன் தன்மையை இழந்துவிடும்.

 

அதேபோலத்தான் மூலிகைகளும். இலைகளைப் பறித்தால் அதனை மூன்று மணி நேரத்துக்குள் மருந்தாக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் அதன் வீரியம் குறைந்துவிடும். சில மூலிகைகள் நச்சாகக் கூட மாறிவிடும்.

நீங்கள் சுட்டிக்காட்டிய வாட்ஸ் அப்பில் நாமும்கூட தினமும் வீட்டில் படுக்கைக்கு அடியில் வெங்காயத்தை வெட்டிவைத்து தூங்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நான் பரிந்துரைக்க மாட்டேன். நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு இருக்கும்போதோ அல்லது நோய் ஏற்பட்ட வீட்டிலிருந்து அது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும் தடுப்பாகவோதான் இதனைச் செய்ய வேண்டும். அம்மை ஏற்பட்ட வீட்டின் வாசலில் வேப்பிலை கட்டி வைத்திருப்பதும் இந்த அடிப்படையில்தான்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்றொரு திருக்குறளை அறிந்திருப்பீர்கள். அதன்படி ஒவ்வொரு தனிநபருக்கும் அவருடைய உடலை பரிசோதனை செய்து அதற்கேற்பவே மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும். தேன் குடித்தால் நல்லது என்ற வாட்ஸ் அப் தகவலைப் பார்த்துவிட்டு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டால் அது உயிருக்கே உலை வைக்கக்கூடும். தேன் நச்சை முறிக்க சீரகக் கசாயம் கொடுப்போம்.

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி இருக்கிறது. அப்படியென்றால், 10 மிளகு இருந்தால் உணவில் கலக்கப்பட்ட உணவின் விஷத்தை முறித்துவிடும் என்று அர்த்தம். அதற்காக மிளகை அதிகமாக உட்கொண்டால் குடல் புண்ணாகிவிடும்.

எனவே, வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் பரவுகிறது என்பதற்காகவே ஒரு விஷயத்தை நாமும் கண்மூடித்தனமாகப் பின்பற்றினால் அது நம்மை துன்பத்தில்தான் ஆழ்த்தும்.

இவ்வாறு சித்த மருத்துவர் சிவமுருகேசன் கூறினார்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தகவல்களை நாமும் எச்சரிக்கையுடன் அணுகுவது நன்மையைப் பயக்கும் என்பதைப் புரிந்து கொள்வோம்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x