

திருநெல்வேலி: திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதற்கு பதில் அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மறுக்கிறார் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். சேலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி மாநாட்டுக்காக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ரூ.30 லட்சம் நிதியும், மத்திய மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் ரூ.25 லட்சம் நிதியும், திருநெல்வேலி மாநகர திமுக சார்பில் ரூ.5 லட்சம், மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நிதியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2007- ஆம் ஆண்டு இளைஞர் அணி முதல் மாநாடு திருநெல்வேலியில் 2 நாட்கள் நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்த தற்போதைய முதல்வருக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அனுமதி வழங்கியிருந்தார். இப்போது 2-வது மாநாட்டை நடத்த முதல்வர் ஸ்டாலின் நமக்கு அனுமதி வழங்கி உள்ளார். சேலத்தில் நடைபெறும் மாநாடு எப்படி நடக்க வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டின் நிகழ்வுகளை பார்த்து தெரிந்துகொண்டிருக்கிறோம்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் மதுரையில் அதிமுக மாநாடு நடத்தியது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அது நடத்தப்பட்டது. மாநாட்டில் முக்கிய பிரச்சினைகள் குறித்த எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தில் ஆரியம், திராவிடம் இல்லை என ஆளுநர் சொல்கிறார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் கேட்டபோது, இதற்கு பதில் சொல்ல நிறைய படிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். திராவிடத்தின் பெயரை தாங்கியுள்ள அதிமுக என்ற கட்சியின் பொதுச் செயலாளர் திராவிடம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு பதில் சொல்ல மறுக்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிராக தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு எதையும் செய்யவில்லை எனச் சொல்கிறார்கள். சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் மசோதா நிறைவேற்றியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இது மக்கள் போராட்டமாக மாறவே கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் அனைத்து ஊழலும் சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையில் வெளியே வந்துவிட்டது என்று தெரிவித்தார்.
பொற்கிழி வழங்கினார்: தொடர்ந்து கேடிசி நகர் மாதா மாளிகையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் 1,062 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பொற்கிழிகளை வழங்கினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.