

நீட் விலக்கு: குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்: "தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழக மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்" என்று, சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
“தயவுசெய்து ஆளுநரை மட்டும் மாற்றிவிடாதீர்கள்!”: "நான் மத்திய அரசை, மத்திய அரசின் பொறுப்பில் இருக்கக் கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கிருக்கும் ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள். இந்த மக்களவைத் தேர்தல் வரைக்குமாவது கொஞ்சம் இருக்கட்டும். எங்களுக்கு அதில் பல சவுரியங்கள் இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“சோழர்களின் வர்த்தக முறை சிறப்பு வாய்ந்தது”: "இந்தியாவும், இந்தியர்களும் உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பது மட்டுமின்றி அவற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இருக்க வேண்டும்" என்று இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியுள்ளார். மேலும் அவர், "கடல் உடனான மனித உறவு மிகவும் ஆழமானது. தென்னிந்தியாவை ஆட்சி செய்த பல்லவர்கள் சக்தி வாய்ந்த கடற்படையை கொண்டிருந்தனர். தெற்காசியாவில் சோழர்கள் சிறந்த வர்த்தக மற்றும் கலாச்சார முறையைக் கொண்டிருந்தனர்" என்று தெரிவித்தார்.
‘கருக்கா’ வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே "ரவுடி ‘கருக்கா’ வினோத்துக்கு அரசியல் தொடர்பு உள்ளதா என்பதை இப்போது கூற முடியாது. முதல்கட்ட விசாரணையே அவரிடம் முடிந்துள்ளது" என ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி - இபிஎஸ் வழக்கு: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
“கூடுதல் அவகாசம் தேவை வேண்டும்” - மஹுவா: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றம்சாட்டில் விசாரணைக்கு ஆஜராகும்படி மக்களவை நெறிமுறைக் குழு சம்மன் அனுப்பிய நிலையில், நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டு மஹுவா மொய்த்ரா பதில் அனுப்பியுள்ளார்.
‘இலவச லேப்டாப் முதல் ஆங்கில வழிக் கல்வி வரை..’: ராஜஸ்தான் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் 5 தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவருதல், அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குதல், பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல்படுத்துதல், மாநிலத்தில் ‘கோ தன்’ திட்டம் மூலம் பசுஞ்சாணத்தை கிலோவுக்கு ரூ.2-க்கு வாங்கிக் கொள்ளுதல் மற்றும் இயற்கை பேரிடர் சேதங்களுக்கு ரூ.15 லட்சம் காப்பீடு அளித்தல் முதலான வாக்குறுதிகளை அவர் அறிவித்தார்.
இதனிடையே ராஜஸ்தானில் செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட், “நாட்டில் தெருநாய்களை விடவும், அமலாக்கத் துறைதான் அதிகமாக அலைகிறது” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
போரில் சேதமடைந்த கப்பல்களுக்கு இழப்பீடு: ஹமாஸுக்கு எதிரான போரின் காரணமாக இஸ்ரேல் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் பல சேதமடைந்த நிலையில், அவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கவலையூட்டும் காசா நிலவரம்: ஹமாஸ் தீவிரவாதக் குழு, பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடை இது. ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, காசா நகரின் புறநகர் பகுதியான ஷிஜாயாவில் உள்ள ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தியதுடன், பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. நேற்று காசாவில் தரைவழித் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் போரில் இதுவரை இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல்களில் இதுவரை காசாவில் 7,028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, உணவு பற்றாக்குறையும் நிலவுவதால் காசா மக்கள் பசியால் வாடுகின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அபீர் எடெஃபா வேதனை தெரிவித்துள்ளார்.
அசாம் முதல்வர் அதிரடி அறிவிப்பு: அசாம் மாநில அரசுப் பணியாளர்கள் அரசு அனுமதியின்றி 2-ம் திருமணம் செய்து கொள்ள முடியாது என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.