எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் வழக்கு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் 66 அதிமுக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கபட்டோம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கபட்டனர். சட்டமன்ற கட்சியின் செயலாளராக அன்பழகன் மற்றும் துணை செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கபட்டனர்.

2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு, ஜூலை17-ல் கட்சியின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயக்குமார், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ண்மூர்த்தியை நியமித்து சபாநாயருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையின் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகரிடம் முறையிட்டோம். அது தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களுடன் அமர்ந்து இருப்பதால், விவாதங்களின் போது அதிமுகவினரால் திறமையாக செயல்பட முடியவில்லை. எனவே, கட்சியில் இருந்து சட்டமன்ற பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்க, சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in