Published : 27 Oct 2023 12:15 PM
Last Updated : 27 Oct 2023 12:15 PM

MGNREGA-நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: தமிழ்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 26-10-2023 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான முக்கியமான திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டம் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பை வழங்குவதோடு, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்திட ஏதுவான நீடித்த மற்றும் நிலையான கிராமப்புற சொத்துக்களை உருவாக்கிடும். கிராமப்புற மக்களின் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்திடும் ஒரே திட்டமாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினைச் செயல்படுத்துவதில், பல்வேறு அளவுகோல்களின்கீழ் தமிழகம் எப்போதும் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 92.86 லட்சம் குடும்பங்களுக்கு பணி அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில், 76.15 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 91.52 லட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் விவசாயம், தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழையையே பெரிதும் நம்பியிருக்கும் நிலையில், இவற்றில் மாறுபாடுகள் ஏற்படும் சூழலில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளுக்கு அதிக தேவை ஏற்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாக இருக்கிறது. குறிப்பாக விவசாயம் நலிவடைந்த பருவத்தில், கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளது.

தமிழகத்தில், 2023-2024 ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 23-10-2023 வரை, 66.26 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழகம் 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளது.

2023-2024 நிதியாண்டில், 19-7-2023 வரை, தொழிலாளர்களுக்கு திறன்சாரா ஊதியத்துக்காக ரூ.4,903.25 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக மத்திய அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. எனினும் அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்துக்கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை. 20-10-2023 நிலவரப்படி, தமிழகத்தில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடி ஆகும்.

"கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17-10-2023 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு நான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று பொது மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் எனக்கு வந்தது.

எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழ்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்கிறேன். மேலும், திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டும், என்று அக்கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x