சென்னை வந்தார் குடியரசு தலைவர் முர்மு: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு நேற்று வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சென்னை விமான நிலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் `மணிமேகலை’ காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார். அருகில் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு நேற்று வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சென்னை விமான நிலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் `மணிமேகலை’ காப்பியத்தின் ஆங்கில பதிப்பு புத்தகம் வழங்கி வரவேற்றார். அருகில் ஆளுநர் ஆர்.என்.ரவி.
Updated on
1 min read

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இதற்காக, பெங்களூருவில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர், 6.50 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.

பின்னர், கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், இரவு உணவை முடித்து அங்கேயே தங்குகிறார்.

பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் முர்முவை தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் இன்று சந்தித்து பேசுகின்றனர். பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்படும் முர்மு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார்.

பிறகு, பிற்பகல் 12.05 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் வழியனுப்பி வைக்கின்றனர். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை மற்றும் அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in