

சென்னை: சென்னை, பல்லவன் சாலையில் உள்ள அறிஞர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி அலுவலகத்தில் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இதில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப், எம்எல்எப், ஏஏஎல்எல்எப், டிபிள்யூயுஆகிய சங்கங்கள் சார்பில் கே.ஆறுமுகநயினார், முருகராஜ், அர்ஜுனன், டி.வி.பத்மநாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.30, 31,நவ.1 தேதிகளில் சென்னையில் பெருந்திரள் அமர்வு போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும், போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்யக் கூடாது. அதிமுகஆட்சியில் போடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்து போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவேண்டும். காலிப் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; ஒப்பந்தப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2018 காலகட்டத்தில் பேருந்துகளைக் குறைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்தஅரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களையும் ஒப்பந்தஅடிப்படையில் நியமிப்பதற்கான நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இதுபோல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 30, 31,நவ.1 தேதிகளில் சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.
இதே நேரம் மாநிலம் தழுவியஆர்ப்பாட்டம் நடைபெறும். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாதுஎன்பதற்காகவே பணிமனைதோறும் 5 ஊழியர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்றார்.