Published : 27 Oct 2023 06:15 AM
Last Updated : 27 Oct 2023 06:15 AM
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) உயர்நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1-ல், “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக அரசு ‘பாரத்’ என்பதை மட்டுமே அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1-வது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசியலமைப்பின் பிரிவு 1-ல் மாற்றம் கொண்டுவருவது உட்பட அரசியலமைப்பின் மிக முக்கிய மாற்றங்களுக்கு, அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சிறப்புப் பெரும்பான்மை (66 %) தேவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இரு அவைகளிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காத மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை பாரத் என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது.
என்.சி.இ.ஆர்.டி. ,பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முயற்சிப்பது அதன் அதிகார வரம்பை மீறியது மட்டுமல்ல, சட்ட நெறிமுறைகளையும் மீறிய செயலாகும். கடும் கண்டனத்துக்குரிய இந்தப் பரிந்துரையை ஏற்கக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT