

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம், முறையான பராமரிப்பின்றி முட்புதர்கள் நிறைந்து சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மண்டபத்தை சீரமைத்து பொதுமக்களின் பார்வைக்கு உடனே திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியாளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். இவர், பட்டியலின மக்களின் பல்வேறு உரிமைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர். அதனால், பட்டியலின மக்கள் போற்றும் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், இரட்டைமலை சீனிவாசனுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், கடந்த 2018-19-ம் ஆண்டு ரூ.1.20 கோடி மதிப்பில் நினைவுமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, வருவாய்த்துறை மூலம் 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இதில், பல்வேறுவசதிகள் மற்றும் அவரது முழு உருவச்சிலையுடன் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஆனால், மண்டபத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேலாகியும் மண்டபம் இன்னும் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படவில்லை. இதனால், நினைவு மண்டபம் பராமரிப்பின்றி முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும், சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடமாக மாறியுள்ளதால் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களின் பார்வைக்கு மண்டபத்தை திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, நினைவு மண்படத்தின் கட்டுமான பணிகளை மேற்கொண்ட பொதுப்பணித்துறை, பணிகள் நிறைவடைந்த பிறகு அவ்விடத்தை செய்தி விளம்பரத் துறையிடம் ஒப்படைக்காமல் உள்ளதாகவும், அதனால், உடனடியாக செய்தி விளம்பரத் துறை மேற்கண்ட மண்படத்தின் பராமரிப்பு பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரிடம் கடிதம் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த விஜயக்குமார் கூறியதாவது: நினைவு மண்டபம் எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், மண்டபத்தின் பணிகள் நிறைவடைந்தும் திறப்பு விழாவுக்காக ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும், மது அருந்துவிட்டு ஓய்வு எடுக்கும் இடமாக இது மாறியுள்ளது வேதனையளிக்கிறது. உள்ளூர் மக்கள் அவர்களை விரட்டினால், கைகலப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல், முட்புதர்கள் நிறைந்துள்ளதால் கால்நடைகளும் இங்கு அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும், நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் இருந்த பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதேநிலை நீடித்தால், மண்டபத்தில் எந்த பொருட்களும் இருக்காது என்ற நிலை ஏற்பட்டுவிடும். அதனால், தாமதிக்காமல் நினைவு மண்டபத்தை மக்கள் பார்வைக்கு திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கூறியதாவது: சமுதாயத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளான பட்டியலின மக்களுக்காக போராடிய இரட்டைமலை சீனிவாசனுக்கு, அனைவரும் அறியும் வகையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் சில நிர்வாக பணிகளால் முறையான திறப்பு விழா நடைபெறாமல் இருப்பதை அறிந்தேன். அதனால், உடனடியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரிடம் கடிதம் வழங்கி, முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றார்.