Published : 26 Oct 2023 04:00 AM
Last Updated : 26 Oct 2023 04:00 AM

கால்டுவெல் எழுதிய ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதைதான் திமுகவின் அடிப்படை கொள்கை: வானதி சீனிவாசன்

எம்எல்ஏ வானதி சீனிவாசன் | கோப்புப் படம்

கோவை: ராபர்ட் கால்டுவெல் எழுதிய ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதை தான் திமுகவின் அடிப்படை கொள்கை என எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆளுநர் மீதான திமுகவின் விமர்சனத்துக்கு ஆளுநர் தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக கட்சியோடு தொடர்புபடுத்தி, பாஜக தலைவர் போல செயல்படுகிறார் என டி.ஆர்.பாலு அறிக்கை விட்டிருப்பதால் அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன்.

“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று ஆளுநர் விமர்சித்திருக் கிறார். கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும், அதன் விளைவும் தான் மக்களிடம் செல்வாக்கைத் தரும்” என்று டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார்.

மதம் மாற்றுவதற்காக தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் கால்டுவெல்தான் திமுகவின் கொள்கை ஆசான். மக்களைப் பிளவுபடுத்தி, மதம் மாற்ற அவர் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சிதான், ஆரிய – திராவிட இனவாதம். திராவிடம் என்ற நிலப்பரப்பை, திராவிட இனமாக முன்வைத்தவர் ராபர்ட் கால்டுவெல்தான்.

அவர் எழுதிய ஆரிய - திராவிட இனவாத கட்டுக்கதையின் அடிப்படையில் பிறந்தது தான் நீதிக் கட்சியும், திராவிடர் கழகமும். அதிலிருந்து உருவானதுதான் திமுக. அதைதான் ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டியிருக்கிறார். தங்கள் கொள்கை ஆசானை விமர்சித்தால் திமுகவுக்கு கோபம் வருவது இயற்கையானது தான். “ஆளுநர் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு உள்ளார்” என்றும் டி.ஆர்.பாலு கூறியிருக்கிறார்.

ஆளுநருக்கு மட்டுமல்ல, அரசு பதவியில் இருக்கும் அனைவரது செலவுகளையும் அரசு தான் ஏற்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கான செலவுகளுக்கான பணம் அவர்களது வீட்டில் இருந்தா வருகிறது? மக்கள் வரிப் பணத்தில்தான் முதலமைச்சரும், அமைச்சர்களும் வலம் வருகிறார்கள். மக்கள் அனைத்தையும் அறிவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x