அரசு ஆவணங்களில் தாய் பெயரை குறிப்பிடக் கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு ஆவணங்களில் தாய் பெயரை குறிப்பிடக் கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

அரசு ஆவணங்களில் தாயின் பெயரைக் குறிப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மாதவ் காந்த் மிஸ்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் எந்தக் குழந்தையும் தாயின் பெயரைச் சொல்லி அடையாளம் காட்டப்படுவதில்லை. தந்தையின் பெயரை வைத்துதான் அனைத்து ஆவணங்களிலும் அடையாளம் காட்டப்படுகிறது.

பெரும்பாலான சட்ட ஆவணங்களில் தந்தையின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. தந்தை என்பவர் வாய் வழியாக சொல்லப்படுபவர். தாய் நிதர்சனமானவர். ஆனால் அனைத்து நிலைகளிலும் தாயின் பெயர் புறக்கணிக்கப்படுவது நியாயமற்றது.

குறிப்பாக, தந்தை காணாமல் போய்விடுதல், மண முறிவு, தனித்து வாழ்தல் ஆகிய சூழ்நிலைகளில் ஆவணங் களில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது அர்த்தமற்றது.

எனவே, தாயின் பெயரை மட்டுமே அனைத்து அரசு ஆவணங்களிலும் குறிப்பிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எச்.எல்.தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in