

ஆளுநருக்கு திமுக எம்.பி, டி.ஆர்.பாலு கண்டனம்: "பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய் பேசுகிறார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது" என்று திமுக எம்பி, டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ்: போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட சுமார் 119 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவர்கள் பலி: ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று சிறுவர்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார ரயில் மோதிய விபத்தில், பலியான சிறுவர்கள் ரவி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் என்பது போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
''அண்ணாமலை தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்'': "அண்ணாமலை நல்ல காவல்துறை அதிகாரியாக இருந்தவர். தற்போது ஒரு சராசரி அரசியல்வாதி போல் செயல்படுகிறார். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். பாஜகவினர் கைது செய்யப்பட்டால் அதற்கு ஒரு மாதிரியும், மாற்றுக் கட்சியினர் கைதுக்கு வேறு மாதிரியும் அறிக்கை கொடுக்கிறார்" என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ விமர்சித்துள்ளார்.
‘மகள்களை வணங்குவது நாடகமா? ’- சிவராஜ் சிங் சவுகான்: மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது கன்னியா பூஜை குறித்து கிண்டல் செய்த முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்-க்கு ‘மகள்களை வணங்குவது நாடகமா’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
''மணிப்பூர் வன்முறைக்குக் காரணம்'' - மோகன் பாகவத்: மணிப்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்டதன் ஆண்டு விழா மகாராஷ்டிராவின் நாக்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது இந்த விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாடகர், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன், " "ஆர்எஸ்எஸ் பற்றி நான் என்ன சொல்ல முடியும். நான் வணங்க மட்டுமே முடியும். அகண்ட பாரதம் என்னும் நமது சிந்தனை, பாரம்பரியம், மற்று கலாச்சாரம் ஆகியவைகளைப் பாதுகாப்பதில் மற்ற யாரையும் விட ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு மகத்தானது" என்று தெரிவித்தார்.
ஒடிசாவின் கேபினெட் அமைச்சரானார் தமிழர்: ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச்சேர்ந்த வி.கே. பாண்டியன், தற்போது அம்மாநில கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
முன்னதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.கார்த்திகேய பாண்டியன் ஐஏஎஸ் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தார். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்திருந்தது.
‘நான் நரகத்தில் இருந்தேன்’: ‘இதுவரை நான் அறிந்திராத நரகத்துக்குச் சென்றேன்’ என்று ஹமாஸ்களால் விடுவிக்கப்பட்ட இரண்டு பிணைக் கைதிகளில் ஒருவரான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் கூறியுள்ளார். முன்னதாக மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த நூரிட் கூப்பர் (79), யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் (85) என இரண்டு பெண்களை திங்கள் கிழமை ஹமாஸ் விடுவித்திருந்தது. “உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக வயது முதிர்ந்த இருவரை விடுவித்துள்ளோம்” என ஹமாஸ் தெரிவித்திருந்தது.
இதனிடையே காசா மீது இஸ்ரேல் நேற்று இரவு நடத்திய வான்வழி தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
77 விமானங்களின் சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்: எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் 77 விமானங்களின் சேவையை ரத்து செய்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை 29 உள்நாட்டு விமான சேவை மற்றும் 48 வெளிநாட்டு விமான சேவையை பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனம் நிறுத்தியது. 4 வெளிநாட்டு விமான சேவை மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
'ஜிகாத்' கோஷங்களுக்கு கண்டனம் தெரிவித்த ரிஷி சுனக்: இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் பேரணியில் ஜிகாத் தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக், இது யூத சமூகத்துக்கு மட்டுமல்ல, நமது ஜனநாயக விழுமியங்களுக்கும் அச்சுறுத்தலாகும் என்று தெரிவித்துள்ளார்.