

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி வழிபாட்டுக்காக 3 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் கோயிலில் கொழு வைத்து, முளைப்பாரி வளர்த்து, பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி நவராத்திரி விழா கொண்டாடுவது வழக்கம். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்தவும், ஆடு, கோழி பலியிடுவதற்கும் தடை விதித்த வனத்துறை, நவராத்திரி வழிபாட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த ஆண்டு சதுரகிரியில் நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நவராத்திரி விழாவில் கடை 3 நாட்களான அக்டோபர் 22,23,24 ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நவராத்திரி விழாவில் 11 நாட்களும் மலையேற அனுமதிக்கவும், கடைசி 3 நாட்கள் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி ஏழூர் சாலியர் சமூக தலைவர் சடையாண்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பக்தர்கள் குறிப்பிட்ட நாட்களில் காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து வனத்துறை முடிவு செய்ய வேண்டும். விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தது.
ஞாயிறு காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேறுவதற்காக தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர். அப்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஏற்கெனவே வழங்கிய அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், நீதிமன்ற உத்தரவு வரும் வரை மலையேற அனுமதிக்க முடியாது என வனத்துறையினர் தெரிவித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனதல் பிற்பகல் வரை காத்திருந்த பக்தர்கள், வனத்துறை அனுமதி வழங்காத நிலையில் வனத்துறை நுழைவு வாயிலில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் அக்.,23,24 நாட்களிலும அனுமதி உண்டா, இல்லையா என தெரியாமல் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
சதுரகிரி மலையேற அனுமதி வழங்கக்கோரி தாணிப்பாறை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பூஜைகள் தடையின்றி நடைபெறும்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி சிறபபு பூஜைகள் தடையின்றி நடைபெற்று வருகிறது. நவராத்திரியில் முக்கிய நிகழ்வான அம்பு விடும் நிழகச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. அதில் பக்தர்கள் கலந்து கொள்வது குறித்து வனத்துறை தான் முடிவு செய்ய வேண்டும்.
ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டுக்கு அக்டோபர் 26 முதல் 4 நாட்கள் அனுமதி: ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக அக்டோபர் 26 முதல் 29-ம் தேதி வரை வழக்கம் போல் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது