

“இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்” என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே “மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
''வடகிழக்குப் பருவமழை தொடங்கியது'': தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ககன்யான்: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சோதனை வாகனம்: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ தலைவர் சோமநாத் இதனை உறுதிப்படுத்தினார்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குப் பின் காசாவுக்கு சென்ற நிவாரணப் பொருட்கள்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் காசாவுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் எகிப்தின் ரஃபா எல்லை வழியாக சனிக்கிழமை காசாவுக்கு சென்றன என்று செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்.7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியதில் இருந்து போர் தொங்கி 15 நாட்களுக்கு பின்னர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி தண்ணீர், உணவு, மருந்து பற்றாக்குறையால் அவதிப்படும் காசா மக்களுக்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்வதற்காக எகிப்து - காசா எல்லை சனிக்கிழமை திறக்கப்பட்டன. சுமார் 3000 டன் உதவி பொருட்களை ஏற்றப்பட்டிருந்த 200-க்கும் அதிகமான லாரிகள் காசாவுக்குள் நுழைவதற்கு முன்பாக ரஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
“திமுக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” - அண்ணாமலை: தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை சாடியிருக்கிறார்.
மேலும் எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் திமுக பெரும் விலை கொடுக்கும். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடி கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அதே பனையூரில் நடப்படும்’’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு: "சிறுமிகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாலின சமத்துவமின்மையை சரி செய்வதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை. இது அதற்கான தருணம். குறைந்து வரும் பாலின விகிதம் மற்றும் குழந்தை பிறப்பில் பாலின விகிதம் ஆகியவை கூர்ந்து கவனிக்கத் தக்கவை என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இவ்விஷயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என தெரிவித்துள்ளார்.
''கேரளாவில் எல்டிஎஃப் கூட்டணியில் மஜத தொடரும்'': கர்நாடகாவில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதேநேரத்தில், கேரளாவில் எல்டிஎஃப் உடனான கூட்டணி தொடரும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
முன்னதாக, கம்யூனிஸ்ட் தோழர்கள் தங்களது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா சனிக்கிழமை தெரவித்துள்ளார். மஜத- பாஜகவுடன் கூட்டணி குறித்த கேரள முதல்வர் பினராய் விஜயன் கருத்துக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
“பிஆர்எஸ் கட்சி 105 இடங்களில் வெற்றி பெறும்”: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் பிஆர்எஸ் கட்சி 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான கே. சந்திரசேகரராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“என்னை கைது செய்யாததற்கு காரணம் இருக்கிறது’’: மத்திய அரசுக்கு நான் எந்த வாய்ப்பையும் கொடுக்காததே அவர்கள் என்னை கைது செய்யாமல் விட்டதற்குக் காரணம்; இல்லாவிட்டால் அவர்கள் என்னை விட்டுவிடுவார்களா என்ன? என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை சொந்த நாட்டுக்குத் திரும்பினார். ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரிப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். சிறையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப், கடந்த 2019-ம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி இருந்ததால், தொடர்ந்து அவர் லண்டனிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் வரும் ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அவர் இஸ்லாமாபாத் திரும்பியுள்ளார்.